மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான ஆதார வள மையங்கள் முடக்கம்
மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான ஆதார வள மையங்கள் முடக்கம்
UPDATED : ஜூன் 20, 2014 12:00 AM
ADDED : ஜூன் 20, 2014 12:18 PM
உடுமலை: மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பயிற்சியளிக்கும், ஆதார வள மையங்கள் மத்திய அரசு நிதி கிடைக்காமல் முடங்கி வருகின்றன.
பள்ளி செல்ல இயலாத மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தவும், உடளவிலும், மனதளவிலும் தேர்ச்சி பெற வைக்கவும் ஒவ்வொரு ஒன்றியங்களிலும், பகல்நேர பாதுகாப்பு மையம், ஆதார வள மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களுக்கு வரும் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு மதிய உணவு, சிற்றுண்டி, பாடம் நடத்த ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு மத்திய அரசின் சார்பில் நிதி ஓதுக்கப்பட்டது.
கடந்த ஓராண்டாக பகல் நேர பாதுகாப்பு மையத்திற்கு மத்திய அரசின் மூலம் நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான ஒன்றியங்களில் இம்மையங்கள் செயல்பாடில்லாமல் உள்ளது. தங்கள் குழந்தைகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்ற, சிறிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்திய இம்மையங்கள் மூடப்படுவதால், பெற்றோரின் எதிர்பார்ப்புகள் இருளில் மூழ்கி வருகின்றன.
உடுமலை ஒன்றியத்தில், போடிபட்டியில் பகல் நேர பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இருபதுக்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகள் இம்மையத்தில் பயன்பெற்று வந்தனர். குழந்தைகளுக்கு மதிய உணவு, சத்துள்ள பருப்பு வகைகள், சுண்டல் உள்ளிட்ட சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.
பயிற்சி பெற்ற ஏராளமான குழந்தைகள், பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோரிடம், இம்மையம் அதிக வரவேற்பை பெற்றது. கடந்த ஓராண்டாக மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் நிதி நிறுத்தப்பட்டதால், மாற்றுத்திறனாளி குழந்தைகளும், பெற்றோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து வசதியும் நிறுத்தப்பட்டுள்ளதால் பத்து குழந்தைகள் மட்டுமே இம்மையத்திற்கு வருகின்றனர்.
குழந்தைகளை பராமரிக்க வேண்டிய ஆசிரியர் பணியிடமும் ஓராண்டாக நிரப்பப்படாமல் உள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்க சிறப்பு ஆசிரியர்கள் மட்டுமே, இக்குழந்தைகளை கவனித்துக் கொள்கின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் நாடி வரும் இம்மையங்களின் நிலை இன்று பரிதாப நிலையில் உள்ளன. புதிதாக அமைந்துள்ள மத்திய அரசு, இதுபோன்ற மையங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதை மீண்டும் தொடர வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
சிறப்பு குழந்தைகளுக்கு வேணும் ஸ்பெஷல் நிதி
அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலர்கள் சிலர் கூறுகையில், "மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பெரிதும் பயனளித்து வந்த, இதுபோன்ற மையங்களுக்கு நிதி ஒதுக்கப்படாமல் இருப்பது, சிறப்பு குழந்தைகளின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. இக்குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக, சிறப்பு நிதி ஒதுக்க மத்திய அரசு முன்வர வேண்டும். தனியார் மூலம் பயிற்சி பெற முடியாத, வசதியில்லாத குழந்தைகளே இங்கு பயிற்சி பெற வருகின்றனர். பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் இல்லாததால், இம்மையங்கள் இருந்தும் எவ்வித பயனுமில்லை" என்றனர்.
