UPDATED : ஜூன் 21, 2014 12:00 AM
ADDED : ஜூன் 21, 2014 10:50 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜோசப்.டி. ரவி கூறியதாவது: அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,000, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்.
ஒன்பது முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.4,000, இளங்கலை பட்டம் பயிலும் மாணவர்களுக்கு ரூ.6,000, முதுநிலை, பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு ரூ.7,000 வழங்கப்படும்.
கல்வி உதவித்தொகை பெறுவதற்கு அவசியம் வங்கி கணக்கு இருக்க வேண்டும். அஞ்சல் வழி கல்வி பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். விரும்பும் மாற்றுத்திறனாளிகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட சிறப்பாசிரியர்களிடம் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில், பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது கல்லூரி முதல்வர் கையொப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
