100 ஏழை மாணவிகளை தத்தெடுத்து எஸ்.பி.ஐ., கல்வி உதவி
100 ஏழை மாணவிகளை தத்தெடுத்து எஸ்.பி.ஐ., கல்வி உதவி
UPDATED : ஜன 27, 2009 12:00 AM
ADDED : ஜன 27, 2009 11:02 AM
சென்னை: வடசென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகள் 100 பேரைத் தத்தெடுத்து தலா ரூ.5,000 வீதம் ஐந்து லட்ச ரூபாய் கல்வி உதவித்தொகையை எஸ்.பி.ஐ., வழங்கியது.
பாரத ஸ்டேட் வங்கி மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மூக்குக் கண்ணாடிகளை வழங்கியது. இதைத்தொடர்ந்து 100 ஏழை மாணவிகளைத் தத்தெடுத்து மாணவிகள் பிளஸ் 2 வரை பயிலத் தேவையான கல்வி உதவிகளை வழங்கும் சேவையில் ஈடுபட்டுள்ளது.
தத்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா சூளை ராட்லர் தெரு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. 100 மாணவிகளுக்கும் இந்த ஆண்டுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் என ஐந்து லட்ச ரூபாய் கல்வி உதவித் தொகையை சென்னை மண்டல மேலாளர் ராஜு வழங்கினார்.
அப்போது, ‘ஏழ்மை கல்விக்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதால் இத்தகைய உதவிகளை செய்கிறோம். இவர்கள் பிளஸ் 2 முடிக்கும் வரை உதவிகள் கிடைக்கும். உயர்கல்விக்குத் தேவையான கல்விக் கடன் வழங்க தயாராக உள்ளோம்’ என்றார்.
ஒருங்கிணைப்பாளர் மோகன கிருஷ்ணன், கவுன்சிலர் பாலசுப்பிரமணியன், தலைமை ஆசிரியை சரோஜா எபிசன் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
