சென்னை பல்கலையின் ஆய்வுகள்: தென் இந்திய வரலாறுதான் சிறந்தது
சென்னை பல்கலையின் ஆய்வுகள்: தென் இந்திய வரலாறுதான் சிறந்தது
UPDATED : ஜூன் 25, 2014 12:00 AM
ADDED : ஜூன் 25, 2014 10:11 AM
சென்னை: "சென்னை பல்கலையில் வரலாறு, தொல்பொருள் ஆராய்ச்சி துறைகள் துவங்கப்பட்ட பின் நடைபெற்ற பல்வேறு தொல்பொருள் ஆய்வுகள் மூலம் இந்திய வரலாற்றில் தென் இந்திய வரலாறுதான் சிறந்தது என நிரூபணமாகியது" என பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன் கூறினார்.
சென்னை பல்கலையில் உள்ள இந்திய வரலாற்று துறையின் நூற்றாண்டு விழா, நேற்று முன்தினம் பல்கலை வளாகத்தில் நடந்தது.
அதில் பங்கேற்ற பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன் பேசியதாவது: சென்னை பல்கலை உருவானதற்கு முன்பு வரை, இந்திய வரலாற்றை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தென் இந்தியாவுக்கு என ஒரு வரலாறு இருப்பதையே மறைத்து விட்டனர்.
மாணவர்களுக்கு நன்மை
கடந்த 1914ம் ஆண்டு சென்னை பல்கலையில் இந்திய வரலாறு எனும் துறை உருவாக்கப்பட்டது. அதுவும், இந்திய வரலாற்றை ஆராய்வதற்காக தான் உருவாக்கப்பட்டது. கடந்த 1976ம் ஆண்டு மால்கம் ஆதிசேஷையா சென்னை பல்கலையின் துணைவேந்தராக இருந்தபோதுதான் வரலாற்றுத் துறை உள்ளிட்ட 40 துறைகள் ஆராய்ச்சிக்கு மட்டுமின்றி, மாணவர்கள் படிக்கும் துறைகளாகவும் மாற்றப்பட்டன.
சென்னை பல்கலையில் வரலாறு, தொல்பொருள் ஆராய்ச்சி துறைகள் துவங்கப்பட்ட பின் நடைபெற்ற பல்வேறு தொல்பொருள் ஆய்வுகள் மூலம் இந்திய வரலாற்றில் தென் இந்திய வரலாறுதான் சிறந்தது என நிரூபணமாகியது. இந்தியாவுக்குள் சண்டையிட்டு வெற்றி பெற்றவர்களை எல்லாம் பேரரசர், சாம்ராட், சக்கரவர்த்தி என்றெல்லாம் அழைத்தவர்களுக்கு மத்தியில் இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளை வெற்றி கொண்ட சோழ மன்னர்கள்தான் சிறந்த பேரரசர்கள் என சென்னை பல்கலை பேராசிரியர்களின் ஆராய்ச்சிகள் நிரூபித்தன.
மழவை மகாலிங்கம் அய்யர், ஆதிமூலம், சி.வை. தாமோதரம் பிள்ளை, உ.வே.சா., ஆகியோரின் ஆராய்ச்சிகள் தமிழக வரலாற்றுக்கு சான்றுகளாயின.
நிரூபித்தார் ஆசிரியர்
கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் வட இந்திய பேரரசுகளின் இலக்கணமாக திகழ்ந்தபோது, அமைதியையும், நிர்வாக ஒழுங்கமைவையும் கொண்டிருந்தவர்கள் சோழர்கள் என்பதையும் ஆதாரங்களோடு விளக்கினர். தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி தொகுத்துள்ள சங்க கால நாணயங்கள் 2,000 ஆண்டுகளுக்கும் முன்பே தமிழகத்திற்கும் மற்ற நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தொடர்பை நிரூபிக்கும் சான்றுகளாக உள்ளன.
கால்டுவெல், ஜி.யு போப் போன்றவர்கள் எல்லாம் தமிழ் நூல்களை ஆராய்ந்து தமிழ் வரலாற்றுக்கு செய்த தொண்டுக்கு, திராவிட கட்சிகள் எந்த உதவியும் செய்யவில்லை. ஆயினும் அவர்களின் ஆராய்ச்சியை தங்களின் வளர்ச்சிக்கு, தந்திரமாக பயன்படுத்தி கொண்டனர். இவ்வாறு அவர் பேசினார்.
நூல் வெளியீடு
முன்னதாக கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பானுமதி ராமகிருஷ்ணன் எழுதிய, "வரலாறு படைத்த வைர மங்கையர்" நூல் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் சென்னை பல்கலையின் துணைவேந்தர் ஆர்.தாண்டவன், வரலாற்று துறை தலைவர் வெங்கட்ராகவன், முன்னாள் துணைவேந்தர் சாதிக், சி.பி.ராமசாமி நிறுவனத்தின் இயக்குனர் நந்திதா கிருஷ்ணா, அன்னை தெரசா பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஜானகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.