புதிய பாடப் பிரிவில் சேர மாணவர்கள் காத்திருப்பு: அனுமதி வழங்கப்படுமா?
புதிய பாடப் பிரிவில் சேர மாணவர்கள் காத்திருப்பு: அனுமதி வழங்கப்படுமா?
UPDATED : ஜூன் 26, 2014 12:00 AM
ADDED : ஜூன் 26, 2014 11:24 AM
கடலூர்: கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் விஷ்வல் கம்யூனிகேஷன் உட்பட புதிய பாட பிரிவுகள் துவங்கப்பட உள்ளதால் புதிய பாட பிரிவுகளில் சேர மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
கடலூர், தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கலைக் கல்லூரியில் பி.ஏ. தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம், பி.ஏ.,பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல், பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், தொழில்முறை வேதியியல், பொது அறிவியல், தாவர உயிரியல் மற்றும் தொழில்நுட்ப இயல், விலங்கியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல், புள்ளியியல், பி.காம். உள்ளிட்ட பட்ட படிப்புகளும், முதுகலை பட்ட மேற்படிப்பில் ஏம்.ஏ., வரலாறு, ஆங்கிலம், எம்.எஸ்சி., கணிதம், இயற்பியல், தாவரவியல் மற்றும் எம்.காம்., ஆகிய பிரிவுகள் உள்ளன.
ஆய்வு படிப்புகளில் எம்.பில். தமிழ், தாவரவியல், பி.எச்டி. தமிழ், வணிகவியல் மற்றும் தாவரவியல் ஆய்வு பாடப்பிரிவுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், இக்கல்லூரியில் ஆண்டுதோறும் புதிய பாடப் பிரிவுகள் துவங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு பி.ஏ. அரசியல் அறிவியல், பி.எஸ்சி. நுண்ணுயிரியல், எம்.எஸ்சி. இயற்பியல், பி.எச்.டி. வணிகவியல் ஆகிய பாடங்கள் துவக்கப்பட்டன.
இந்த ஆண்டு பி.எஸ்சி. விஷ்வல் கம்யூனிகேஷன், பி.பி.ஏ., எம்.பி.ஏ., எம்.ஏ. மனித வள மேலாண்மை, எம்.ஏ. உடல்குறியியல், எம்.ஏ. அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், எம்.எஸ்சி. புள்ளியியல், மைக்ரோ பயாலஜி, எம்.எஸ்.டபிள்யூ., ஆகிய பட்ட மேற்படிப்புகளும், எம்.பிஎல்., வணிகவியல், பொருளியல், வரலாறு, கணினி அறிவியல், நுண்ணுயிரியல், உயிரியல், பொருளியல் ஆகிய படப்பிரிவுகளும், மற்றும் பி.எச்டி. நுண்ணுயிரியல், வரலாறு, உயிரியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகள் துவங்கப்படவுள்ளன.
இந்த ஆண்டு இப்பாடப் பிரிவுகளை துவங்க அரசிடமிருந்து அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி விரைவில் வரும் எனத் தெரிகிறது. இந்நிலையில் தற்போது கல்லூரியில் பட்ட படிப்புகளில் மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வு துவங்கி நடந்து வருகிறது.
இதில் விஷ்வல் கம்யூனிகேஷன் சென்னையில் உள்ள முக்கிய கல்லூரிகளில் மட்டுமே உள்ளது. இதில் சேர்வதற்கு தனியார் கல்லூரியில் லட்சக்கணக்கில் டோனேஷன் பெறப்படுகிறது. மேலும் எம்.ஏ. மனித வள மேலாண்மை படிப்பு சென்னை, மும்பை, பெங்களூரு, டில்லி போன்ற இடங்களில் மட்டுமே உள்ளது.
கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்து வரும் இது பேன்ற புதிய பாடப் பிரிவுகள் கடலூர் அரசு கல்லூரியில் துவங்கப்பட உள்ளதால் மாணவர்கள் வழக்கமான பாடங்களை தேர்வு செய்ய ஆர்வம் காட்டாமல் புதிய பாடப்பிரிவுகளில் சேர காத்திருக்கின்றனர்.
எனவே, பல்கலைக்கழக நிர்வாகம் கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி அனுமதி கேட்டுள்ள பாடங்களுக்கு விரைந்து அனுமதியளித்தால் கிராமப்புற மாணவர்கள் வேலைவாய்ப்பு உள்ள படிப்புகளை தேர்வு செய்து படிக்க ஏதுவாக இருக்கும்.
