புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரிக்கு மாணவர் சேர்க்கை அனுமதி கிடைக்குமா?
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரிக்கு மாணவர் சேர்க்கை அனுமதி கிடைக்குமா?
UPDATED : ஜூன் 27, 2014 12:00 AM
ADDED : ஜூன் 27, 2014 10:55 AM
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரிக்கு, மாணவர் சேர்க்கைக்கான அனுமதி கிடைக்குமா என்பது, ஜூலை முதல் வாரத்தில்தான் தெரியவரும்.
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரியை ஆய்வுசெய்த, இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர், பேராசிரியர் பற்றாக்குறை, பரிசோதனைக் கூடத்தில் சில வசதிகள் இல்லாதது உள்ளிட்ட குறைகளை சுட்டிக் காட்டினர். இதனடிப்படையில், நடப்பு 2014-15ம் ஆண்டுக்கான, மாணவர் சேர்க்கைக்கு, மருத்துவக் கவுன்சில் அனுமதி மறுத்தது. இதையடுத்து, பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, மருத்துவக் கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைபாடுகள் நீக்கப்பட்டன.
சுகாதாரத் துறை செயலர் ராகேஷ் சந்திரா தலைமையில் அதிகாரிகள், டில்லிக்கு சென்று, புதுச்சேரி அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, மருத்துவக் கவுன்சிலிடம் சமர்ப்பித்தனர்.
இதற்கிடையில், முதல்கட்ட, சென்டாக் கவுன்சிலிங், கடந்த 24, 25ம் தேதிகளில் நடந்து முடிந்தது. மாணவர் சேர்க்கைக்கு அனுமதி இல்லாதபோதும், மாணவ, மாணவிகள், அரசு மருத்துவக் கல்லுாரியில் சேரவே ஆர்வம் காட்டினர். இருந்தபோதும், அவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்படவில்லை.
மருத்துவக் கவுன்சிலின் கூட்டம், ஜூன் 26ம் தேதியன்று நடக்கும் எனவும், இந்த கூட்டத்தில், புதுச்சேரி அரசின் மருத்துவக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துவிடும் என, தகவல் வெளியானது. சுகாதாரத் துறை செயலர் ராகேஷ் சந்திரா மீண்டும் டில்லிக்கு சென்று, மருத்துவக் கவுன்சிலின் தலைவரை சந்தித்து, புதுச்சேரி அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை விளக்கி கூறினார்.
இருந்தபோதும், மருத்துவக் கவுன்சில் தலைவர், அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுள்ளதால், மருத்துவக் கவுன்சில் கூட்டம் நடக்கவில்லை. வரும் ஜூலை 3ம் தேதியன்றுதான், மருத்துவக் கவுன்சில் சேர்மன், டில்லிக்கு திரும்புகிறார். ஜூலை முதல் வாரத்தில், மருத்துவக் கவுன்சில் கூடுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.