அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் தேவை: மக்கள் கோரிக்கை
அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் தேவை: மக்கள் கோரிக்கை
UPDATED : ஜூன் 30, 2014 12:00 AM
ADDED : ஜூன் 30, 2014 11:27 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் போதிய கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோரி, மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுநல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,137 பள்ளிகள் உள்ளன. இதில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் போதிய கழிப்பறை வசதி இல்லாமல் உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான அரசு பள்ளிகளுக்கு மட்டும், அப்பகுதியை சேர்ந்த பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிக்கு இதுவரை மாவட்ட நிர்வாகம் பாதுகாக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பாதுகாக்க குடிநீரின்றி அவதி அடைந்து வருகின்றனர். இது, பொதுநல ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் துவக்க பள்ளிகள் உட்பட பல்வேறு அரசு பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் மாணவ மாணவிகள் இயற்கை உபாதைகளை கழிக்க, பள்ளி வளாகத்தின் அருகே உள்ள திறந்த வெளிகளை நாடி செல்லும் அவலநிலை உள்ளது. குறிப்பாக, தர்மபுரியை அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரியை அடுத்த அதியமான்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் தண்ணீர் வசதியின்றி போதிய பராமரிப்பு இன்றி உள்ளது.
இதனால், இக்கழிப்பறைகளை மாணவ மாணவிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், பள்ளி வளாகத்தில் திறந்த வெளிகளிலும், அருகில் உள்ள ரயில்வே லைன் ஓரங்களிலும், ஏரிக்கரையில் உள்ள புதர்களின் மத்தியில் இயற்கை உபாதைகளை கழிக்க கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள், போதிய கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதியில்லாமல் மாணவ மாணவிகள் திறந்த வெளிகளில் இயற்கை உபாதைகளை கழிப்பதை தடுக்க இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுநல ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மாணவ மாணவிகளின் நலன் கருதி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும், பாதுகாக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கவும், பள்ளிகளில் உள்ள கழிவறைகளை சீரமைக்கவும், கழிவறைகளுக்கு தண்ணீர் வசதி செய்து தர, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுநல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
