பாதிக்கப்பட்ட மலைகிராம இளைஞர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க விளையாட்டு பயிற்சி
பாதிக்கப்பட்ட மலைகிராம இளைஞர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க விளையாட்டு பயிற்சி
UPDATED : ஜூன் 30, 2014 12:00 AM
ADDED : ஜூன் 30, 2014 12:26 PM
திண்டுக்கல்: நக்சலைட்டால் பாதிக்கப்பட்ட மலைகிராம இளைஞர்கள், புத்துணர்ச்சி பெறுவதற்காக விளையாட்டு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பாச்சலூர், கடுகுதடிபுதூர், தாமரைக்குளம் உள்ளிட்ட 12 மலைகிராமங்களில் வசிப்பவர்கள் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். இங்குள்ள இளைஞர்கள் தவறான பாதையை தேர்வுசெய்யக்கூடாது என்பதற்காக அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான முகாம்கள் துவங்கப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக இவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிப்பதற்காக 12 கிராமங்களில் இருந்து 36 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
முகாமை ஜெயச்சந்திரன் எஸ்.பி. துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜோசப்பாத் பிரிட்டன் முன்னிலை வகித்தார். நக்சலைட் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், பயிற்றுனர்கள் சுஜாதா, துரைக்கண்ணு, சுந்தர்ராஜன், கோகிலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாலிபால், கால்பந்து, தடகளம் விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு பின் 12 கிராமங்களை சேர்ந்த இளைஞர்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
