விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி
விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி
UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM
ADDED : ஜூலை 03, 2014 12:07 PM
வால்பாறை: வால்பாறை மலைப்பகுதியில் செயல்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில், அடிப்படை வசதிகள் இல்லாததால், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை மலைப்பகுதியில், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்ட ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இவர்களின் குழந்தைகள் உயர்கல்வி பெற தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அங்குள்ள பல்வேறு பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள்தான்.
இவர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயிலவேண்டும் என்ற நோக்கத்தில், அரசின் மாணவர்கள் தங்கும் விடுதிக்கு குழந்தைகளை அனுப்புகின்றனர். இதேபோல், பல்வேறு செட்டில்மெண்ட் பகுதிகளைச்சேர்ந்த ஆதிவாசிகளின் குழந்தைகள் தங்கி படிக்கும் வகையில், உண்டு உறைவிடப் பள்ளியும் செயல்படுகிறது.
வால்பாறை மலைப்பகுதியில் உள்ள, நான்கு மாணவர்கள் என, விடுதிகளில் 266 மாணவ, மாணவியர் தங்கி படிக்கின்றனர். ஆனால், இந்த ஹாஸ்டலில் மாணவர்களுக்கு தேவையான எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. குறிப்பாக குடிநீர், குளிக்க சுடுதண்ணீர், மிக்சி, கிரைண்டர், தங்கும் வசதி உள்ளிட்டவை இல்லாததால், மாணவர்கள் நாள்தோறும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அம்மாணவர்கள் கூறுகையில், "அரசு கலைக்கல்லுாரியில் செயல்படும் ஹாஸ்டலில், மிக்சி, கிரைண்டர் வசதி இல்லை. இதனால், வாரம் முழுவதும் மூன்று வேளையும் சாப்பாடுதான் வழங்குகின்றனர். அரசு வழங்கும் எந்த ஒரு பொருட்களும் மாணவர்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை. ஹாஸ்டலில் தங்கி படிக்கும் நாங்கள், இங்குள்ள குறைகளை வெளியில் சொல்ல முடியாத நிலையில் உள்ளோம். எனவே உயர்அதிகாரிகள் ஹாஸ்டலுக்கு அடிக்கடி வந்து, மாணவர்களின் குறைகளை நேரடியாக கேட்டறிய வேண்டும்" என்றனர்.
இதுகுறித்து ஆதிதிராவிட நலத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில், இது போன்ற பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக தண்ணீர், மிக்சி, கிரைண்டர், படுக்கை வசதி, கழிப்பிட வசதி, பணியாளர் பற்றாக்குறை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
தனி கவனம் தேவை: கோவை மாவட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதியாக, தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், கடந்த வாரம் திட்டக்குழுவினர் வால்பாறையில் நேரில் ஆய்வு செய்தனர். இப்பகுதியில் செயல்படும் அரசு மாணவர்கள் விடுதியில், போதிய அடிப்படை வசதிகள் செய்ய, உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால்தான், ஹாஸ்டலில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே தமிழக அரசு இதில், தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
