சமையலறையில் தீ - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மாணவர்கள்
சமையலறையில் தீ - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மாணவர்கள்
UPDATED : ஜூலை 04, 2014 12:00 AM
ADDED : ஜூலை 04, 2014 11:17 AM
திருத்தணி: ஊராட்சி நடுநிலைப் பள்ளி, சமையல் அறையில் எரிவாயு உருளையில் இருந்து, கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்தது. உரிய நேரத்தில், தீ அணைக்கப்பட்டதால், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் எவ்வித காயமின்றி உயிர் தப்பினர்.
திருத்தணி ஒன்றியம், செருக்கனூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், மொத்தம், 114 மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல், மாணவர்கள் பள்ளிக்கு சென்று பாடம் படித்துக் கொண்டிருந்தனர். காலை, 10:30 மணிக்கு, பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு தயாரிக்கும் சமையல் அறைக்கு ஊழியர்கள் சின்னபொண்ணு, அம்பிகா இருவரும் வந்தனர்.
பின்னர், சமையல் செய்வதற்காக அடுப்பை பற்ற வைக்க முயன்ற போது, எரிவாயு உருளையில் இருந்து காஸ் கசிந்து திடீரென தீப்பிடித்தது. ஊழியர்கள் அங்கிருந்து தப்பி வெளியே ஓடி வந்தனர். சமையல் அறையில் இருந்து புகை வந்ததால், (25 அடி தூரத்தில் இருந்த) வகுப்பறைகளில் இருந்த மாணவர்கள் அங்கிருந்து விளையாட்டு மைதானம் மற்றும் பள்ளிக்கு வெளியே சென்றனர்.
தகவல் அறிந்ததும் கிராம மக்கள் மற்றும் திருத்தணி தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதனால், சமையல் அறையில் இருந்து, வெளியே தீ பரவவில்லை. இதனால், அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உயிர் தப்பினர்.
