குண்டு எரிதல், வட்டு எரிதலில் தொடர்ந்து சாதிக்கும் கல்லூரி மாணவி
குண்டு எரிதல், வட்டு எரிதலில் தொடர்ந்து சாதிக்கும் கல்லூரி மாணவி
UPDATED : ஜூலை 04, 2014 12:00 AM
ADDED : ஜூலை 04, 2014 12:02 PM
கோவை: குண்டு எறிதல் போட்டியிலும், வட்டு எறிதல் போட்டியிலும் சாதித்து வரும் கல்லுாரி மாணவிக்கு, பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் சுபாஷினி. பிளஸ் 2 வரை, பேரூர் அருகேயுள்ள சவுடேஸ்வரி வித்யாலயா பள்ளியில் படித்தார். இவர், 8வது படிக்கும் போதே கடந்த 2008 ல் மைசூரில் நடந்த தேசிய அளவிலான போட்டியில், குண்டு எறிதலில் இரண்டாவது இடமும், அரியலுாரில் நடந்த மாநில அளவிலான போட்டியிலும் முதலிடம் பெற்றார்.
2009ல் ஸ்கூல் பெடரேஷன் இந்தியா சார்பில், கொச்சினில் நடந்த போட்டியில், குண்டு எறிதலில் முதலிடம், வட்டு எறிதலில் இரண்டாவது இடம், 2010 ல் ஆந்திர மாநிலம் வாரங்கலில் நடந்த ஜூனியர் தேசிய அளவிலான போட்டியில் குண்டு எறிதலில், 11.15 மீ., துாரம் எறிந்து முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.
இதே ஆண்டு சண்டிகரில் நடந்த ஜூனியர் தேசியப் போட்டியில், குண்டு எறிதலில் முதலிடம் பெற்றார். கடந்த, 2011 ல் பெங்களூருவில் நடந்த தேசியப் போட்டியில், குண்டு எறிதலிலும், வட்டு எறிதலிலும் இரண்டாவது இடம், ராஞ்சியில், குண்டு எறிதலில் முதலாவது இடம், வட்டு எறிதலில் இரண்டாவது இடம் பெற்றார்.
கடந்த, 2012 ல் பூனேவில் நடந்த போட்டியில், குண்டு எறிதலிலும், வட்டு எறிதலில் இரண்டாவது இடம், கடந்தாண்டு கொச்சினில் நடந்த போட்டியிலும், பெங்களூருவில் நடந்த ஜூனியர் தேசியப் போட்டியிலும் மூன்றாவது இடம் பிடித்தார். தற்போது, கோவை நிர்மலா கல்லுாரியில், இரண்டாமாண்டு படித்து வரும் இவர், 5, 6, 7ம் தேதிகளில், ஈரோடு மாவட்டத்தில் நடக்க உள்ள மாவட்டங்களுக்கு இடையேயான மாநில தடகளப் போட்டியில் பங்கேற்க பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
சுபாஷினி கூறுகையில், "குண்டு எறிதலும், வட்டு எறிதலும் எனக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்ததால், அதில் ஆர்வம் செலுத்தத் துவங்கினேன். அத்லெட்டிக் பவுண்டேஷன் பயிற்சியாளர் நந்தகுமார் அளித்து வரும் பயிற்சி மிகவும் உபயோகமாக உள்ளதால், போட்டிகளில் சாதிக்க முடிகிறது" என்றார்.
