தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரை காமராஜ் பல்கலை பிரச்சினைக்கு என்றுதான் தீர்வு கிடைக்கும்?

மதுரை காமராஜ் பல்கலை பிரச்சினைக்கு என்றுதான் தீர்வு கிடைக்கும்?

மதுரை காமராஜ் பல்கலை பிரச்சினைக்கு என்றுதான் தீர்வு கிடைக்கும்?


UPDATED : ஜூலை 04, 2014 12:00 AM

ADDED : ஜூலை 04, 2014 12:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2014 12:00 AM ADDED : ஜூலை 04, 2014 12:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக உயர் கல்வித்துறை வரலாற்றில் துணைவேந்தர் ஒருவரின் பதவி தொடர்பான சர்ச்சை, கோர்ட் வரை சென்று, நியமனம் செல்லாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இதுவே முதல்முறை. பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) விதிப்படி, ஒருவர் துணைவேந்தராக தேர்வு பெற, அவர் பத்து ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

ஆனால், அரசியல் பின்னணியால், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில், துணைவேந்தர்கள் தேர்விற்கு, இவ்விதி கடைபிடிக்கப்படுகிறதா என்பது விவாதத்திற்கு உரிய வேண்டிய விஷயம். மாநில அரசின் ஒருசில கொள்கை திட்டங்களில், யு.ஜி.சி. போன்ற மத்திய அமைப்புகள் முழுஅளவில் தலையிடுவதில்லை என்பது கல்வியாளர்கள் கருத்தாக உள்ளது. ஆனால், மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் பதவி மூலமாக வெடித்த சர்ச்சைக்கு பின் துணைவேந்தர்கள் நியமனங்களில், யு.ஜி.சி., விதி கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு, துணைவேந்தரை நியமனம் செய்த மாநில அரசு என்ன முடிவை எடுக்க உள்ளது என தமிழக கல்வித்துறை வட்டாரத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், இந்த சர்ச்சையால் மாணவர்கள் கல்வி மற்றும் பல்கலையின் வழக்கமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இத்துறை வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

துணைவேந்தராக கல்யாணி பொறுப்பேற்றதில் இருந்து சர்ச்சைகளும், பிரச்னைகளும் தொடர்கின்றன. இதற்கு முன் எத்தனையோ துணைவேந்தர்கள் பணியாற்றிய போதும் அவர்களுக்கு எல்லாம் வராத பிரச்னைகள் இவரை சூழ்ந்தது ஏன்?

இதன் பின்னணியாக கூறப்படுவதாவது: தமிழக அரசு அமைத்த துணைவேந்தர் தேர்வுக் குழு சார்பில் 2012ல் முடிவு செய்யப்பட்ட மூன்று பேர் பேனலில், கல்யாணி இடம் பெற்றார். அரசியல் பின்னணி இருப்பதாக முன்கூட்டியே அறிந்த ஒரு சிலர், கல்யாணிக்கு 10 ஆண்டுகள் பேராசிரியர் பணி அனுபவம் இல்லை என்ற தகவலை கசிய விட்டனர். அவரை துணைவேந்தராக வரவிடாமல் முட்டுக்கட்டை போட்டாலும், அவரே துணைவேந்தராக தேர்வு செய்யப்பட்டார்.

தீர்மானிக்கும் சங்கங்கள்

இதனால், கல்யாணியை எதிர்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சில ஆண்டுகளாக, இப்பல்கலையில் பதவியேற்கும் துணைவேந்தர்கள் தங்கள் பதவிக் காலத்தை பிரச்னையின்றி கடக்க, இங்குள்ள ஒருசில ஆசிரியர் சங்கங்களின் ஆதரவு வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது. பல துணைவேந்தர் பணிக்காலங்கள் இப்படி கடந்து சென்ற நிலையில், இச்சங்கங்களை கல்யாணி ஒரு பொருட்டாக கருதவில்லை.

மாறாக, அவருக்கு எதிராக போராட்டங்கள் வலுத்தபோது ஒரு குறிப்பிட்ட சங்கம் இரண்டாக உடைந்தது. இதனால், சங்க நிர்வாகிகள் சிலர் தீவிரமாக தலையிட்டு, கல்யாணிக்கு எதிரான நிலைப்பாட்டை தீவிரப்படுத்தினர். இதன் தொடர்ச்சிதான் கவர்னர் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்ட புகார்கள், கோர்ட் வழக்குகள், பணி நியமனங்களுக்கான இடைக்கால தடைகள்... என கூறப்படுகின்றன.

அடுத்தடுத்த நடவடிக்கை

கல்யாணி பொறுப்பேற்ற சில நாட்களில், பி.எச்டி., ஆராய்ச்சி மாணவர் என்ற பெயரில் பல்கலை விடுதிகளை பல ஆண்டுகளாக அத்துமீறி ஆக்கிரமித்தவர்கள் கண்டறியப்பட்டு வெளியேற்றப்பட்டனர். புகார் கூறிய பேராசிரியர்களில், ஒருவரின் கல்வித் தகுதி மற்றும் அவர் வகித்த பணித் தகுதி ஆய்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்தது கண்டறிந்து, அவர் பதிவியிறக்கம் செய்யப்பட்டார். மேலும், பல்கலை பேராசிரியர்கள் பலர், உறுப்புக் கல்லூரிகளுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டனர்.

எதிர்ப்புகள்

ஆசிரியர்கள், மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் கல்யாணிக்கு எதிரான ஒரு வட்டம் உருவானது. ஆசிரியர்கள், மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டங்கள் தொடர்ந்தன. உதவி பேராசிரியர்கள் நியமனம், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணி நியமனங்கள் விதிப்படி நடக்கவில்லை என கோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்து இடைக்கால தடைகள் பெறப்பட்டன. துணைவேந்தர் குறித்து சர்சையை கிளப்பும் வகையில் பல்வேறு வசனங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. கலெக்டர் முதல் கவர்னர் வரை புகார் செய்யப்பட்டன.

வரவேற்பு

அவரது பணிக்காலத்தில் பிரச்னைகள் ஒருபக்கம் இருந்தாலும், பல்கலை கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். பல்கலையில் 18 ஆக இருந்த புலங்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்பட்டன. இரண்டு புதிய துறைகள் உருவாக்கப்பட்டன. பல ஆண்டுகள் முடங்கிய கேண்டீன் புதுப்பிக்கப்பட்டது.

பல்கலை வளாகங்கள் முழுவதும் சூரிய சக்தி மின் வசதி ஏற்படுத்தப்பட்டன. நவீன தரத்திலான நூலக வசதி, தொலைநிலைக் கல்வி பிரிவில் 107 புதிய படிப்புகள் துவங்கியது போன்றவற்றை நடுநிலை பேராசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

தனி நபர்கள் ஈகோ

கல்யாணிக்கும், பதவியிறக்கம் செய்யப்பட்ட கிருஷ்ணசாமிக்கும் இடையே நடக்கும் தனிப்பட்ட ஈகோ போராகவே அனைவரும் கருதுகின்றனர். கிருஷ்ணசாமியின் பின்னணியில்தான் கவர்னருக்கும், அமைச்சருக்கும் புகார் அனுப்பப்பட்டதாக துணைவேந்தர் கருதினார் என்று பேசப்பட்டது. இதன் விளைவாக, கிருஷ்ணசாமி மீது அடுத்தடுத்த நடவடிக்கை பாய்ந்தது. இதற்கிடையே மாணவர் பிரச்னை, ஆசிரியர் சங்கங்கள் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவதாக கூறப்படுகிறது.

நிர்வாகத் தேக்கம்

பேராட்டங்கள், நடவடிக்கை காரணமாக பல்வேறு பல்கலை கோப்புகள் தேக்கமடைந்துள்ளதாக பேராசிரியர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, பி.எச்.டி., ஆராய்ச்சி பிரிவில் பல மாணவர்கள் பாதித்துள்ளனர். பல்கலையில் பைல்கள் அதிகளவு தேங்கியுள்ளதாக கூறுகின்றனர்.

இதுதவிர, கல்லூரிகளுக்கு புதிய பாடத் திட்டங்கள் அனுமதிப்பது, பழைய பாடத் திட்டங்களுக்கான புதுப்பிப்பு உள்ளிட்ட பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கல்வித் உதவித் தொகை, பல்கலை மானியக் குழு நிதி கிடைப்பது போன்ற பாதிப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளன.

அரசு கவனத்திற்கு...

இப்பிரச்னை குறித்து மூத்த கல்வியாளர்கள் கூறியதாவது: கோர்ட் உத்தரவு ஒருபுறம் இருந்தாலும், பதிவாளர் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் பல்கலையை பாரபட்சமின்றி வழி நடத்துவதற்கு முன்வர வேண்டும். படிக்கும் வளாகத்திற்குள் நோட்டீஸ் ஒட்டுவதை தடுத்து மீறுவோர் மீது போலீசார் வழக்கு பதிவும் செய்ய வேண்டும். கோர்ட் உத்தரவிற்கு பின், அரசிடமிருந்து பல்கலைக்கு இதுவரை எவ்வித வழிகாட்டுதல் உத்தரவுகளும் வரவில்லை. மாணவர்கள் கல்வி பாதிக்காமல் தமிழக முதல்வர் இப்பிரச்னையை கையில் எடுக்க வேண்டும், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us