ஒழுகும் வகுப்பறைகள் - உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஒழுகும் வகுப்பறைகள் - உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?
UPDATED : ஜூலை 07, 2014 12:00 AM
ADDED : ஜூலை 07, 2014 12:57 PM
ஸ்ரீபெரும்புதுார்: பூதேரிபண்டை, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி கட்டடம், சிதிலமடைந்து உள்ளதால், மழைநீர் வகுப்பறைக்குள் ஒழுகும் நிலை உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாமல், மாணவர்கள் அவதிப்படுகின்றனர். ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்கு உட்பட்டது பூதேரிபண்டை.
இப்பகுதியில், கடந்த 1960ம் ஆண்டு, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, குறுகிய இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
கழிப்பறை இல்லை
கடந்த, 55 ஆண்டுகளுக்கு முன், இரு வகுப்பறைகள் கொண்ட, ஓடு வேய்ந்த கட்டடத்தில் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. தற்போது ஓடுகள் சிதிலமடைந்து, காணப்படுகிறது. மழை பெய்யும்போது, வகுப்பறைகளுக்குள் மழைநீர் ஒழுகுகிறது. மழை நீர் ஒழுகும் இடத்தில், ஓடு மீது, பிளாஸ்டிக் பையை விரித்து, காற்றில் பறந்து விடாமல் இருக்க கற்களை வைத்துள்ளனர்.
மேலும், இந்த பள்ளியில் விளையாட்டு மைதானம், கழிப்பறை, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி, மாணவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, பள்ளி மாணவர்களின் நலன் கருதி, சிதில மடைந்த ஓட்டு கட்டடத்தை அகற்றி விட்டு, புதிய கட்டடம் கட்ட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பலன் இல்லை
இதுகுறித்து, கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறியதாவது: பள்ளி நிலைமை குறித்து, கல்வித்துறையிடம் புகார் செய்தும் பலனில்லை. அனைவருக்கும் கல்வி திட்டத் தின் கீழ், இப்பள்ளி புனரமைப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, உதவி தொடக்க கல்வி அலுவலக வளாகத்தில், கழிப்பறை கட்டுவதற்கா க பயன்படுத்தி கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
