பேருந்துகள் இல்லாததால் பள்ளிக்கு நெடுந்தூரம் நடைபயணம் செய்யும் மாணவர்கள்
பேருந்துகள் இல்லாததால் பள்ளிக்கு நெடுந்தூரம் நடைபயணம் செய்யும் மாணவர்கள்
UPDATED : ஜூலை 07, 2014 12:00 AM
ADDED : ஜூலை 07, 2014 01:37 PM
செங்கல்பட்டு: உத்திரமேரூர் ஒன்றியத்தில் சாலவாக்கம், குண்ணவாக்கம், வெண்டிவாக்கம், காட்டுக்கொள்ளை, பாண்டவாக்கம், சடாச்சிவாக்கம், வாடாதவூர், சித்தமல்லி, மருதம் ஆகிய கிராமங்கள் உள்ளன.
இக்கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், திருப்புலிவனம் மற்றும் உத்திரமேரூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இவர்களின் வசதிக்காக, தனியார் மினி பேருந்து மட்டுமே நீண்ட காலமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஒன்றை தவிர, அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், இப்பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பெரும்பாலானோர், 5 கி.மீ., துாரம் உள்ள திருப்புலிவனத்திற்கு நடைப்பயணமாகவும், மிதி வண்டிகளிலும் அல்லது பெற்றோர் மூலம் இருசக்கர வாகனங்களிலும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிக்கு செல்ல முடியாமல், இப்பகுதி மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அரசு பேருந்து திடீர் நிறுத்தம்: காஞ்சிபுரத்திலிருந்து, திருப்பருத்தி குன்றம், கீழ்கதிர்பூர், மேட்டுகுப்பம், கூத்திரமேடு, மேல்ஒட்டிவாக்கம், முசரவாக்கம் வழியாக கிளார் வரை அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், அந்த பேருந்து திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் மேட்டுகுப்பம் கிராமவாசிகளும், பள்ளி மாணவர்களும், 3 கி.மீ., துாரம் உள்ள கீழம்பிக்கு வந்து, காஞ்சிபுரம் மற்றும் பிற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
எனவே, மாணவ, மாணவியர் நலன் கருதி, சாலவாக்கத்தில் இருந்து, குண்ணவாக்கம், திருப்புலிவனம் வழியாக உத்திரமேருக்கும் காஞ்சிபுரத்தில் இருந்து மேற்கண்ட கிராமங்கள் வழியாக கிளாருக்கும், பேருந்து இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ, மாணவியரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
