சான்றிதழ் எரிந்ததால் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத அவலம்
சான்றிதழ் எரிந்ததால் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத அவலம்
UPDATED : ஜூலை 08, 2014 12:00 AM
ADDED : ஜூலை 08, 2014 12:16 PM
திருத்தணி: வீட்டினுள் ஏற்பட்ட மின்கசிவால் இரு குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. இதில் மாணவரின் சான்றிதழ் எரிந்ததால் நேற்று நடந்த பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க முடியாமல் தவித்தார்.
திருத்தணி அடுத்த மத்தூர், பெரியார் நகரில் வசிப்பவர் அன்பழகன், 55. இவர் இரு குடிசைகளை அருகருகே கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு தமிழரசன், டில்லிபாபு, ராஜா என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இதில் டில்லிபாபு பிளஸ் 2 முடித்து பொறியியல் படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
நேற்று நடந்த பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி கடிதமும் வந்தது. அன்பழகன் வீட்டினுள் சென்ற மின்கம்பியில் இருந்து நேற்று முன்தினம் இரவு மின்கசிவு ஏற்பட்டு வீடு திடீரென தீப்பிடித்தது. இதை பார்த்த அன்பழகன் குடும்பத்துடன் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்தார். காற்று பலமாக வீசியதால் தீ பக்கத்தில் உள்ள குடிசை வீட்டிற்கும் பரவியது.
திருத்தணி தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் கிராம மக்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் அன்பழகனின் இரு குடிசை வீடுகளும் எரிந்து சாம்பலாகின.
இதில் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 4 சவரன் நகை, துணிமணிகள், வீட்டு உபயோக பொருட்கள் என ஒன்றரை லட்சம் மதிப்பிற்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் டில்லிபாபுவின் கல்வி மாற்று சான்றிதழ்கள் (டி.சி.) தீயில் கருகின.
எனவே பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க முடியாமல், டில்லிபாபு கதறி அழுதார்.இதுகுறித்து திருத்தணி போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
