"பக்தி இலக்கியங்கள் இருக்கும் வரை தமிழ் மொழி எளிதில் அழியாது"
"பக்தி இலக்கியங்கள் இருக்கும் வரை தமிழ் மொழி எளிதில் அழியாது"
UPDATED : ஜூலை 08, 2014 12:00 AM
ADDED : ஜூலை 08, 2014 12:37 PM
ப.வேலூர்: "பக்தி இலக்கியங்கள் இருக்கும் வரை தமிழ் மொழி அழியாது" என கருத்தரங்கில் பேராசிரியர் வெள்ளியங்கிரி பேசினார்.
ப.வேலூரில் நாங்கள் இலக்கியகம் கலை இலக்கிய சிந்தனையாளர் மன்றம் சார்பில் கருத்தரங்கு நடந்தது. வக்கீல் நாகரத்தினம் தலைமை வகித்தார். நாங்கள் இலக்கியகத்தின் தலைவர் கவிஞர் செல்மா காமராஜன் 1934ல் பால் பிரண்டன் என்ற ஐரோப்பியர் எழுதிய நூலின் தமிழ் வடிவமான "இந்தியப் புதையல் ஒரு தேடல்" என்ற நூல் குறித்து பேசினார்.
பேராசிரியர் வெள்ளியங்கிரி "பக்தி இலக்கியங்களும் தமிழை வளர்த்தன" என்ற தலைப்பில் பேசியதாவது: யுனெஸ்கோ நிறுவனத்தின் ஆய்வு ஒன்றில் அழிந்து வரும் மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என அறிவித்துள்ளது. அது முற்றிலும் தவறு. ஏராளமான இலக்கியங்களை தன்னுள் கொண்டுள்ள தமிழ் மொழி அவ்வளவு எளிதாக அழிந்து விடாது.
தமிழின் மற்ற இலக்கியங்கள் அறையில் படிப்பதற்கும், அரங்கங்களில் பேசப்படுவதற்கும் மட்டுமே பயன்படுகிறது. ஆனால் பக்தி இலக்கியங்கள் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழில் இசையை தன்னுள் கொண்டுள்ளதால் அவை அரங்கங்களில், ஆலயங்களில் அதிகம் பாடப்படுகிறது.
அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர் போன்றவர்கள் தங்கள் பக்தி நூல்கள் மூலம் தமிழை வளப்படுத்தினர். தேவாரம், திருவாசகம் போன்ற நூல்கள் இல்லாமல், தமிழ் இல்லை என்ற நிலை இன்றும் உள்ளது. வட மொழியின் ஆதிக்கத்தாலேயே அழியாத தமிழ், தற்போது ஆங்கிலத்தின் தாக்கத்தால் அழிந்து விடாது. இவ்வாறு அவர் பேசினார்.
நாங்கள் இலக்கியக அறக்கட்டளை தலைவர் டாக்டர் முத்துக்குமார், வர்த்தகர் சங்க கவுரவத் தலைவர் அர்ச்சுனன், செயலாளர் முத்து சரவணன், துணைச் செயலாளர் அறிவாயுதம், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
