தொழில் முனைவோராக வழி காட்டுகிறது வேளாண் பல்கலைக்கழகம்
தொழில் முனைவோராக வழி காட்டுகிறது வேளாண் பல்கலைக்கழகம்
UPDATED : ஜூலை 10, 2014 12:00 AM
ADDED : ஜூலை 10, 2014 10:47 AM
வேலை காலி இல்லை என்ற விளம்பர பதாகைகள் கண்ணுக்கு தெரிந்த காலம் எல்லாம் மாறி விட்டது இன்று. அதற்கு ஏற்றார் போல் படிப்பு முறைகளும் தங்களுக்கான வழியை ஏற்படுத்திக் கொள்ள கற்றுக் கொடுக்கின்றன. பலரும் சொந்தக் காலில் நிற்க தயாராகி வருகின்றனர். அதற்கு வழி காட்டுகிறது கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்.
கடந்த 2004ம் ஆண்டு துவங்கப்பட்ட இம்மையத்தில் வேளாண் பொருட்கள் மதிப்புக் கூட்டல் மற்றும் பதப்படுத்தல் குறித்து தொழிற் பயிற்சி அளித்து வருகிறது. நெல்லிக்காய் பதப்படுத்துதல், காய்கறிகள் மற்றும் பழங்கள் பதப்படுத்துதல், மிட்டாய் வகைகள், தக்காளி மற்றும் பப்பாளி பதப்படுத்துதல், வாசனை பொருட்கள் மற்றும் ஊறுகாய் பதப்படுத்துதல், சிறு தானியங்களை பதப்படுத்துதல் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அடுமனை பொருட்களில் சிறு தானியங்களை கொண்டு தயாரிக்கப்படும் ரொட்டி, பன், ரோல், பீஸா தயாரிப்பு, ரெடி மிக்ஸ் என்று சொல்லப்படும் சமையலுக்கு பயன்படும் சாம்பார் பொடி, ரசப்பொடி, பாதாம் கீர், குலோப் ஜாமுன் தயாரிக்க பயன்படும் பவுடர், தோசை மாவு ஆகியவை தயாரிக்கவும் பதப்படுத்தவும் கற்றுத் தரப்படுகின்றன.
ஒரு தலைப்பில் ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் அளிக்கப்படும் பயிற்சிக்கு கட்டணமாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தங்குமிடம், உணவு ஆகியவற்றை பயிற்சி எடுக்க வருபவர்களே மேற்கொள்ள வேண்டும். தங்குமிடம் வேண்டுவோருக்கு பயிற்சி விடுதி உண்டு. இதற்காக ஒரு நாளுக்கு 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இரண்டு நாட்கள் பயிற்சி போதாது; கூடுதல் நாளுக்கு பயிற்சி தேவைப்படுகிறது என்று கருதுவோருக்கு 5 நாட்களுக்கு வீதம் 5,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் விஸ்வநாதனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: தொழில் முனைவோராக விருப்பம் தெரிவிக்கும் பலர், பல்வேறு மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து பயிற்சி பெற்றுச் செல்கின்றனர். வணிக ரீதியாக மட்டுமல்லாமல், வீட்டுத் தேவைக்காகவும் பொருட்களை தயாரிப்பவர்களும் வந்து பயிற்சி பெறுகின்றனர்.
பயிற்சி பெற்று செல்வோர் வணிக ரீதியாக பொருட்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்த போதும், முதலீடு பெரும் குறையாக இருக்கும். இப்படியான ஆர்வம் உள்ளவர்களுக்கு, எங்களின் கூடத்திலேயே தயாரிக்க அனுமதி வழங்கப்படும். இதற்கு உறுப்பினர் கட்டணமாக 5,000 ரூபாய் செலுத்த வேண்டும்.
தயாரிப்பு மூலப்பொருட்களை அவர்கள் கொண்டு வர வேண்டும். மேலும் எவ்வளவு பொருட்கள் தயாரிக்கிறார்களோ, அதற்கு ஏற்ப சொற்ப தொகை வசூலிக்கப்படும். இதுபோன்று 60 பேர் பதிவு செய்துள்ளனர். நடப்பாண்டு 10 பேர் பதிவு செய்து பொருட்களை தயாரித்து வருகின்றனர்.
இப்பொருட்கள் பரிசோதனை மற்றும் தரச்சான்றுக்கும் உட்படுத்திக் கொள்ளலாம். இதற்கான பரிசோதனைக் கூடமும் உள்ளது. உணவுப் பரிசோதனை செய்முறைக்கு வரும் மாணவ மாணவியருக்கு சிறப்பு சலுகையும் உண்டு. இவ்வாறு விஸ்வநாதன் கூறினார்.
உங்களுக்கும் தொழில் முனைவோராக வேண்டும் என்று ஆசை இருந்தால் 0422 - 6611268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
உடலுக்கு உகந்த உணவு
பயிற்சி மேற்கொண்ட கோவையை சேர்ந்த பிரியதர்ஷினி கூறுகையில், "உணவு முறைகள் மாறி விட்டதால், நம்மில் பலர் நோய் வாய்ப்பட்டுள்ளோம். இதனால், சிறு தானியத்தில் தயாரிக்கப்படும் உணவு வகைகள் தயாரிப்பு பயிற்சி பெற வந்தேன். இரண்டு நாட்கள் முழுவதுமாக கற்றுக் கொண்டேன். வணிக ரீதியான தயாரிப்புக்கு மட்டுல்லாமல், வீட்டுத் தேவைக்கும் குதிரை வாலி, சாமை, கம்பு உட்பட சிறு தானியங்களால் ஆன உணவு வகைகளை பயன்படுத்தப் போகிறேன்" என்றார்.
ஈரோட்டை சேர்ந்த சுமதி கூறுகையில், "உடலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களை பயன்படுத்தி உணவு தயாரிக்கும் முறைகளை கற்றுக் கொண்டேன். நாம் சில வகை உணவு வகைகளையே மீண்டும் மீண்டும் உட்கொண்டு வருகிறோம். அதை தவிர்த்து உடலுக்கு உகந்த உணவு வகைகள் ஏராளமாக உள்ளன என்பதை தெரிந்து கொண்டேன்" என்றார்.
