சென்னைப் பல்கலையின் கிண்டி வளாக மாணவர்கள் திடீர் போராட்டம்
சென்னைப் பல்கலையின் கிண்டி வளாக மாணவர்கள் திடீர் போராட்டம்
UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM
ADDED : ஜூலை 11, 2014 02:05 PM
கிண்டி: சென்னைப் பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் மாணவர்கள், தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி, ஜுலை 11ம் தேதி காலையில், திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கூறப்படுவதாவது: சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு கிண்டியில் ஒரு வளாகம் உள்ளது. ஆனால், அங்கே இருக்கும் விடுதியின் 38 அறைகளில் மொத்தம் 225 மாணவர்கள் தங்கியுள்ளனர்.
இதன்மூலம், இடநெருக்கடியால் தங்களுக்கு ஏற்படும் வசதி குறைபாடுகளைப் பற்றி, பல மாதங்களாக பலமுறை நிர்வாகத்திடம் அந்த மாணவர்கள் புகார் அளித்திருக்கின்றனர்.
மேலும், போதுமான அளவில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளும் இல்லை. எனவே, இவைப் பற்றியும் புகார்கள் தரப்பட்டுள்ளன. ஆனால், எந்த புகார் குறித்தும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
அண்ணா பல்கலையிடமிருந்து கூடுதலாக ஒரு விடுதி, மாணவர்களுக்காக பெறப்பட்டது. ஆனால், அந்த விடுதி மாணவர்களின் பயன்பாட்டிற்கு இன்னும் அனுமதிக்கப்படவில்லை.
கிண்டி வளாகத்திலுள்ள அறிவியல் ஆய்வகத்தில், தேவையற்ற ரசாயனங்களை அப்புறப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.
இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள், ஜுலை 11ம் தேதி காலையில், திடீர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
