எஸ்.சி., எஸ்.டி. கல்லூரி மாணவர்கள் உதவித்தொகை இன்றி அவதி
எஸ்.சி., எஸ்.டி. கல்லூரி மாணவர்கள் உதவித்தொகை இன்றி அவதி
UPDATED : ஜூலை 12, 2014 12:00 AM
ADDED : ஜூலை 12, 2014 11:02 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டத்தில் கலை அறிவியல், இன்ஜினியரிங், மருத்துவம், பாலிடெக்னிக் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகள் என 88 கல்லூரிகள் இயங்கி வருகிறது.
இக்கல்லூரிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் அரசால் ஆதிதிராவிட நலத்துறை மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இக்கல்வி உதவித்தொகை மூலம் இம்மாணவ மாணவிகள் தங்களின் படிப்பு செலவை பார்க்கும் நிலை இருந்து வருகிறது. இதனை நம்பியே பல ஏழை குடும்பங்கள் தங்களது பிள்ளைகளை பட்டப்படிப்புக்கு படிக்க அனுப்பி வருகின்றனர்.
ஆனால் கடந்தாண்டுக்கு கல்வித் தொகை கேட்டு விண்ணப்பித்த 88 கல்லூரிகளில் 58 கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 30 கல்லூரிகளுக்கு இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து கல்லூரிகளில் கேட்டால் "இன்னும் வரவில்லை" என மட்டுமே பதில் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் கேட்டால் 30 கல்லூரிகளுக்கு அரசு பணம் வழங்கவில்லையென அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
கல்லூரி படிப்பை முடித்தவர்கள், படிப்பவர்கள் என யாருக்கும் தமிழக அரசு கல்வி உதவித்தொகையை கொடுக்காமல், தொடர்ந்து தாமதப்படுத்தி, இழுத்தடிப்பு செய்து, இருட்டடிப்பு செய்து வருகிறது. இதுகுறித்து, சில உயர் அதிகாரிகளிடம் முறையிட்டால் முறையான பதில் வருவதில்லை.
கடந்த 2013-14ம் ஆண்டுக்கான கல்வி உதவி தொகையான நான்கு கோடி ரூபாயை 2012-13ம் ஆண்டில் வழங்கப்பட வேண்டிய கோர்ஸ் கட்டணம் கொடுத்து விட்டதாக தெரிவிக்கின்றனர்.
எனவே தான் இந்த 30 கல்லூரிகளுக்கு பணம் வழங்கப்படவில்லை. முதலில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட பின் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்குங்கள் என மேலிட உத்தரவால் அதிகாரிகள் நடந்து வருகின்றனர். இதனால், கல்லூரிகளில் கட்டப்படும் கட்டணங்களுக்கு மாணவ மாணவிகள் பரிதவித்து வருகின்றனர்.
ஒரு சில மாணவ மாணவிகள் கூறும்போது, "கிராமப்புறங்களில் உள்ள கல்லூரிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதில்லை. ஆனால் அதிகாரிகளுக்கு வேண்டப்பட்ட நகரப்பகுதியில் கல்லூரிகளுக்கு மட்டும் மாவட்ட அலுவலகத்தில் அதிகாரிகள், அலுவலர்கள் உதவித்தொகையை உடனடியாக வழங்கி விடுகின்றனர்" என்றனர்.
