UPDATED : ஜூலை 12, 2014 12:00 AM
ADDED : ஜூலை 12, 2014 12:39 PM
உடுமலை: காவியங்கள் போற்றிய தமிழரின் வீரத்தை பறைசாற்றும் வீரக்கலைகள் பலவும் இன்று அழிவை நோக்கியே செல்கிறது. இதனை மீட்டெடுக்கும் பொறுப்பு எங்களுக்கும் உண்டு என தங்களின் பிஞ்சுக்கைகளில், சிலம்பம் எடுத்து தற்காப்பு கலையை கற்று வருகின்றனர் உடுமலை அரசு பள்ளிக்குழந்தைகள்.
நவீன உலகில் வீட்டினுள் பல்வேறு சாதனங்களில் மூழ்கிக்கிடக்கும், குழந்தைகளுக்கு, நமது பாரம்பரிய கலையின் சிறப்புகள் தெரிய வாய்ப்பில்லை. உடல் வலிமை, மனவலிமையை பெருக்கி, குழந்தை மற்றும் இளமை பருவத்தை சிறப்புள்ளதாக்கிய நமது கலைகளை காப்பாற்ற உடுமலை அருகே அரசுப்பள்ளி மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் தற்காப்புக்கலைகள் பல இருந்தாலும் காவியங்கள் போற்றிய வீரக்கலைகளின் எண்ணிக்கை குறைவே. அதில் ஒன்று சிலம்பக்கலை. தற்போது கல்லூரிகளில் இக்கலை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி செல்லும் எங்களுக்கு பாரம்பரியம் முக்கியம் என உடுமலை பள்ளபாளையம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சிலம்பக் கலையை கற்றுக்கொள்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இக்கலையை சிலம்பக் கலை பயிற்சியாளர் சக்திவேல் என்பவரின் மூலமாக மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. சிலம்பாட்டம், புலியாட்டம், கரடி விளையாட்டு, பிச்சுவா, சோடு, வீச்சு முறைகளின் அடிப்படை பயிற்சிகளான முண்டா வீச்சு, அடிவரிசை, சுருள் வீச்சு, சிலம்பத்தின் அடிப்படை பயிற்சிகளாக அடிவரிசை, கூட்டு அடிவரிசை, சில்தா, தீப்பந்த விளையாட்டு போன்ற பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தைகள் தானே கலையின் அடிப்படைகளை ஆசிரியர்களுக்காக பெயரளவிற்கு மட்டும் கற்று வைத்திருப்பர் என எண்ணியதை முற்றிலும் முறியடிக்கும் வண்ணம், கண்களில் ஒளிமிளிர, பார்வையாளர்களின் கண்களுக்கு சிக்காத மின்னல் வெட்டுகளாய் அக்குழந்தைகளின் கைகளில் கம்புகள் சுழல்கிறது.
ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை விருப்பமுள்ள மாணவர்கள் இக்கலையில் பயிற்சி எடுத்து வருகின்றனர். நாற்பது மாணவியரும், 50 மாணவர்களும் பயிற்சி பெறுகின்றனர். வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பாடவகுப்புகள் முடிந்த பிறகு அல்லது இடைவெளி நேரங்களில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஒருவர் மீது குழுவாக தாக்குதல் நடக்கும் போது, அதனை எப்படி எதிர்கொள்வது, கைகளில் ஆயுதமின்றி உள்ள போது, தங்களை எப்படி தற்காத்துக்கொள்வது போன்ற பயிற்சிகளும் சிலம்பக் கலையில் உள்ளடக்கம். பள்ளி குழந்தைகளையே குறி வைத்து தாக்கும் சமுதாய வன்முறைகள் அதிகரித்து வருவதால், இதுபோன்ற தற்காப்பு கலைகள் கற்றுக்கொள்வது அவசியமாக திகழ்கிறது.
பள்ளி தலைமையாசிரியர் மகாலட்சுமி கூறியதாவது: அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்களால், பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் மனதில் அச்சத்துடனேயே குழந்தைகளை அனுப்புகின்றனர். குழந்தைகளை ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்திருக்கவே முயற்சிக்கின்றனர்.
இதனைத்தவிர்த்து அவர்களுக்குள் இருக்கும் வீரத்தை வெளிப்படுத்தும் போது குழந்தைகளே தங்களின் பாதுகாப்பினை உருவாக்கிக்கொள்வர் என்பதன் அடிப்படையில் இக்கலை கடந்த இரண்டாண்டுகளாக கற்றுக்கொடுக்கப்படுகிறது.
சிலம்பக் கலை பயிற்சியாளர் சக்திவேல் கூறியதாவது: சிலம்பக்கலை பண்டைய தமிழர்களின் போர்கலையாகும். இக்கலை ஒருவரை தற்காத்துக்கொள்ள மட்டுமின்றி, உடலின் எலும்பு, தசைகளை உறுதிப்படுத்தவும் உதவுகிறது. மாணவர்கள் மாவட்ட அளவில் ஐந்திற்கும் மேற்பட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளனர். பொருளாதாரத்தில் பின் தங்கி இருப்பதால் பெரும்பாலான மாணவர்களுக்கு திறமை இருந்தும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடிவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
