புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ கவுன்சில் அனுமதி
புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ கவுன்சில் அனுமதி
UPDATED : ஜூலை 13, 2014 12:00 AM
ADDED : ஜூலை 13, 2014 11:56 AM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரிக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கதிர்காமத்தில் புதுச்சேரி அரசின் மருத்துவ கல்லூரி உள்ளது. இக்கல்லூரியை ஆய்வு செய்த இந்திய மருத்துவ கவுன்சில், பேராசிரியர்கள் பற்றாக்குறையை நிரப்ப சுட்டிக்காட்டியது. புதுச்சேரி அரசும் மருத்துவ கல்லூரியில் பேராசிரியர்களை நியமித்து, மருத்துவ கவுன்சிலுக்கு தெரிவித்தது. இருந்தும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு முறையான அனுமதி கிடைக்காததால் முதற்கட்ட சென்டாக் கவுன்சிலிங்கில் மருத்துவ படிப்பு தேர்வு செய்த மாணவர்களுக்கு சேர்கை ஆணை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் மாணவர் சேர்கை தொடர்பாக கடந்த புதன்கிழமை மருத்துவ கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் புதுச்சேரி அரசின் மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரிக்கு கடந்த புதன்கிழமை நடந்த கூட்டத்தில் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வஆணை வரவில்லை என்றனர்.
நாளை (14ம் தேதி) பொறியியல் பாட பிரிவுகளுக்கு கவுன்சிலிங் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக மருத்துவ கல்லூரி அனுமதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
