5 ஆண்டுக்கு ஒரு முறை அங்கீகாரம் புதுப்பிக்க கோரிக்கை
5 ஆண்டுக்கு ஒரு முறை அங்கீகாரம் புதுப்பிக்க கோரிக்கை
UPDATED : ஜூலை 13, 2014 12:00 AM
ADDED : ஜூலை 13, 2014 01:26 PM
நாமக்கல்: "பள்ளியின் அங்கீகாரம் புதுப்பித்தலை மூன்று ஆண்டுக்கு ஒரு முறை என்பதை ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை என மாற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட சுயநிதி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி சங்கத்தின் சார்பில் கல்வி வளர்ச்சி நாள் விழா நாமக்கல்லில் நடந்தது. சங்க மாவட்டத் தலைவர் திருவின்மணாளன் தலைமை வகித்தார். விழாக்குழுத் தலைவர் பாலசுப்ரமணியம் வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பாபு, சங்க நிறுவனர் சுப்பய்யன், மாவட்ட தனியார் பள்ளிகளின் கூட்டமைப்புத் தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் இரண்டு பேர் அடங்கிய ஆசிரியர் குழு அமைத்து, குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் ஆலோசனை பெட்டிகள் வைக்க வேண்டும். ஆசிரியர், மாணவர்கள் ஒருங்கிணைந்த கூட்டம் மாதம் ஒரு முறை நடத்த வேண்டும் என்ற பள்ளிக்கல்வித்துறை ஆணையை வரவேற்பது.
குழந்தைகளின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி நடப்பு கல்வியாண்டில் நலிவுற்றோர், வாய்ப்பு மறுக்கப்பட்டோர் குழந்தைகளுக்கு 25 சதவீதம் ஒதுக்கீட்டில் கல்வி அளிக்க கல்வித்துறை ஆணையை தொடர்ந்து செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
பள்ளியின் அங்கீகாரம் புதுப்பித்தலை மூன்று ஆண்டுக்கு ஒரு முறை என்பதை ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை என மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன ஓட்டுனர்கள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, பள்ளி வாகன ஓட்டுனர்கள் பத்து ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்பதை மாற்றி, மூன்று ஆண்டு முன் அனுபவம் இருந்தாலே போதும் என அறிவிக்க வேண்டும்.
மழலையர், தொடக்கப்பள்ளிகளுக்கு என தனி இயக்குனரகம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
