UPDATED : ஜூலை 15, 2014 12:00 AM
ADDED : ஜூலை 15, 2014 11:53 AM
சென்னை: குன்றத்தூரில் செயல்படும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (சி.ஐ.டி.) சார்பில் பள்ளி கல்வி முடித்த மாணவர்களுக்கு ரோபோட்டிக் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தினமலர் நாளிதழ் மற்றும் சி.ஐ.டி. நிறுவனம் இணைந்து பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அடுத்து என்ன படிக்கலாம் என்பதற்கு "உங்களால் முடியும்" என்ற வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தின. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு சி.ஐ.டி. நிறுவனம் சார்பில் ரோபோட்டிக் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, மாணவர்கள் பதிவு செய்தனர். தற்போது இந்த மாணவர்களுக்கு ரோபோட்டிக் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து சி.ஐ.டி. நிறுவனத் தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது: குன்றத்தூர் சி.ஐ.டி. வளாகத்தில் ஐரோப்பாவில் முதல் நிலை ரோபோ தயாரிப்பு நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த கூகாவுடன் இணைந்து "சி.ஐ.டி. - கூகா ரோபாட்டிக் சென்டர்" நிறுவப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் தான் "உங்களால் முடியும்" நிகழ்ச்சியில் பதிவு செய்த மாணவர்களுக்கு ரோபோட்டிக் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆயிரம் மாணவர்களில் தினசரி 80 மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர். கல்லூரி ரோபோட்டிக் மையத்தில், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரோபோ உள்ளது. இது ஆட்டோமொபைல் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் உள்ளது. இந்த ரோபோவின் செயல்பாடுகள், பாகங்கள், அவற்றின் இயக்கங்கள் குறித்தும், மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுவதுடன், ரோபோவை இயக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் கணினி வாயிலாக அந்த ரோபோக்கள் கட்டுப்படுத்தப்படுவது தொடர்பாகவும், மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இது மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
