தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அலையோடு விளையாடு: உற்சாகம் தரும் அலைச்சறுக்கு விளையாட்டு

அலையோடு விளையாடு: உற்சாகம் தரும் அலைச்சறுக்கு விளையாட்டு

அலையோடு விளையாடு: உற்சாகம் தரும் அலைச்சறுக்கு விளையாட்டு


UPDATED : ஜூலை 20, 2014 12:00 AM

ADDED : ஜூலை 20, 2014 11:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2014 12:00 AM ADDED : ஜூலை 20, 2014 11:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடல் அலையைப் பார்த்தாலே பயத்தில் கற்சிலையாய் உறைந்து நிற்பவர்களுக்கு மத்தியில், அலை மேலேயே அலையாய் அலைந்து குலைகுலையாய் முந்திரிக்காய் என விளையாடுபவர்களை பார்த்தால் ஆச்சரியம் பூச்சொரியாதா! ஒரு சனிக்கிழமை; காலை கோவளம் கடற்கரை. கையில் பலகை, காலில் கட்டு; கடலை நோக்கி காத்திருக்கும் இளைஞர்களின் கண்கள்; விழுங்கிய சூரியனை கக்கிக் கொண்டிருந்தது வங்கக்கடல்; சுறுசுறுப்பாகியது இளைஞர் கூட்டம்.

நீர்ச்சுழல் எது?

ஆழமான கடலோட மேற்பகுதியில வேகமா மோதுற காத்து, தண்ணியோட மேற்பகுதியை தள்ளிக்கிட்டு வருது. அப்படி வேகமா ஓடி வர்ற தண்ணி ஆழம் குறைவான பகுதியால தடுக்கப்படும்போது அது அலையா உருவாகி கரையில மோதி திரும்புது. காத்தோட வேகத்தை பொறுத்தும், கரையோட ஆழத்தைப் பொறுத்தும் அலையோட வேகம் மாறுபடும்.

அலைகள் கரையை மோதிட்டு கடலுக்குள்ளே திரும்பும்போது கரை நோக்கி வர்ற அலையோட மோதினா கடல் கொந்தளிக்கிற மாதிரி தெரியும். கரைக்கு முன்னால மணல் திட்டோ, பாறையோ இருந்தா அந்த பகுதியில மோதுற அலை திருப்பி விடப்பட்டு பக்கவாட்டுல பயணிச்சு கரையைத் தொடும்.

அப்படி தொடுற அலைகள்ல பெரிய அலை இருந்தா அலை சுழற்சி இருக்கும். அந்த அலைகள் திரும்பற இடத்துல ஆழமான பகுதி இருந்தா நீர்ச்சுழல் இருக்கும். இதுதான் கடற்கரை சார்ந்த சின்ன அறிவியல். இதைப் புரிஞ்சுக்கிட்டா தான் நாம அலையோட விளையாட முடியும் என்கிறார் பே ஆப் லைப் அலைச்சறுக்குப் பள்ளி ஆசிரியர் சவுக்கத் அலி.

என்ன தகுதி?

அலைச் சறுக்கு ரொம்ப சுவாரசியமான விளையாட்டு. இந்த விளையாட்டுல ஈடுபடுறவங்களுக்கு எல்லா உடல் உறுப்புகளும் நல்லா வேலை செய்யும். அதனால உடல் இறுகும், தொப்பை குறையும், சுறுசுறுப்பு அதிகமாகும். அதுக்கு கடலை பற்றிய அறிவும், நீந்தக் கூடிய தகுதியும் இருக்கணும் என்று விவரிக்கிறார் கடல் மீட்பாளரும், அலைச்சறுக்குப் பயிற்சியாளருமான செல்வம்.

அலைகளை எதிர்க்காதீர்

பயிற்சியை பற்றிய அடிப்படைகளை சவுக்கத் அலி சொல்ல துவங்கினார்... முதல் நிலை பயிற்சி பெறுபவர்கள் உடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடைகள் எளிமையான, எளிதில் உலரக் கூடியதாக, நீர் தங்காததாக இருக்க வேண்டும். அவர்கள் பச்சை நிற உடை அணிந்தால் தேடுவதற்கும், மீட்பதற்கும் ஏதுவாக இருக்கும். மிதவை ஆரஞ்சு நிறத்தில் இருக்க வேண்டும்.

நன்னீரை விட கடல் நீரின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் எளிதில் நீந்தவும், நீந்தாத போது மிதக்கவும் முடியும். சாதாரணமாக நிற்கும்போது நம் அருகில் வரும் அலைகளை எதிர்க்கக் கூடாது. தலையைக் குனிந்து அந்த அலையை வழியனுப்பி விட வேண்டும். தொலைவில் இருந்து வரும் அலை நம் அருகில் வருவதற்குள் தாவ வேண்டும். அப்போது அந்த அலை, நம்மை தூக்கி இறக்கி விட்டு சென்று விடும் என்றார்.

கடலின் அடிப்படைகளை பற்றி விளங்கிக் கொண்ட பின் சர்ப் போர்ட் எனப்படும், எடை குறைவான ஒன்பது அடி வரையிலான அலைச்சறுக்குப் பலகையின் பின்னால் இணைக்கப்பட்டிருக்கும் லீஷ் எனும் பாலியூரித்தீன் ரப்பர் கயிற்றை கணுக்காலில் பிணைக்கின்றனர். கடலில் இறங்கி பலகையில் படுத்து நீந்தத் துவங்குகின்றனர். பயிற்றுனரின் ஆலோசனைகளின்படி கரையோரமாகவே நீந்தும் இளைஞர்கள், கொஞ்சம் கொஞ்சமாக ஆழத்துக்குச் சென்று ஆர்ப்பரிக்கும் அலையை எதிர்கொள்கின்றனர். அந்த அலையோடு சறுக்கி, அலை மடியும் இடம் வரை வந்து கரையில் இருப்பவர்களுக்கு விருந்து படைக்கின்றனர்.

பள்ளிக்கு விதிமுறைகள்

அலைச்சறுக்குப் பள்ளிகள் அகில இந்திய அலைச்சறுக்குப் பள்ளிக் குழுமத்தால் பதிவு பெற்றிருக்க வேண்டும். பயிற்றுனர்கள், முதலுதவிப் பயிற்சியை முடித்திருக்க வேண்டும் என்பவை அடிப்படையான வீரர்களுக்கு விதிமுறைகள்.

* அலைச் சறுக்குப் பலகையின் இணைப்புக் கயிற்றை கண்டிப்பாக காலில் இணைத்திருக்க வேண்டும். அதனால் பயிற்சியாளர் தவறி விழுந்தாலும் சறுக்குப் பலகை விலகாது.

* அலையின் வளைவுப் பகுதியை ஒட்டியே அலைச் சறுக்கு செய்ய வேண்டும். எல்லா அலைகளையும் ஒருவரே மறிக்கக் கூடாது.

* 2 அடி உயரமுள்ள அலைகளை மட்டுமே விளையாட்டுக்கு பயன்படுத்துவது பாதுகாப்பைத் தரும்.

* கடலில் பாறை, சுழல், ஆழமான பகுதிகளைப் பற்றி தெரிந்துகொண்டு விளையாட வேண்டும்.

* சக வீரருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கடல் அலையை மறித்துக் கொண்டு நிற்பதும், பாம்பு போல வளைந்து, நெளிந்து சென்று சக வீரருக்கு இடைஞ்சல் செய்வதும் தவறு.

* போட்டியின் போது வீரர்களுடன் மோதி பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தன் சறுக்குப் பலகையைக் கழற்றி விடக்கூடாது.

விருப்பம்

எல்லா அலைகளையும் மறிப்பவர்களை விட மூன்று நான்கு அலைகளை மறித்து சாகசம் செய்பவர்களையே தேர்வாளர்கள் விரும்புவர். நன்கு தேர்ந்த போட்டியாளர்கள் ஐந்தடி வரையிலான பெரிய அலைகளை தேர்ந்தெடுத்து அலையிலேயே பயணித்து அதன் நுனிக்கு மேல் தாவி பல்டி அடித்து அதே அலையில் குதித்து மீண்டும் அலையிலேயே பயணிக்கும் ரோடியோ பிலிப் விளையாடுபவர்களை தேர்வாளர்கள் விரும்புவர்.

அலையின் நுனியில் சிறிது நேரம் நின்று 360 டிகிரி திரும்பி மீண்டும் அலையிலேயே பயணிக்கும் ப்ளோட்டர் வீரர்களையும் தேர்வாளர்கள் விரும்புவர். அலை மடியும் சுழற்சிக்குள் குழாய் போன்ற பகுதி உருவாகும். அந்த பகுதிக்குள்ளேயே சறுக்கி வெளிவரும் டியூப் விளையாட்டும் தேர்வாளர்களைக் கவரக்கூடியது.

மாமல்லபுரம், கோவளம் பகுதிகளில் அலைச்சறுக்கு பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. தொடர்புக்கு: 99404 88880.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us