பெண்களை பாதுகாக்க கருவிகள் கண்டுபிடிப்பு: பொறியியல் மாணவர் சாதனை
பெண்களை பாதுகாக்க கருவிகள் கண்டுபிடிப்பு: பொறியியல் மாணவர் சாதனை
UPDATED : ஜூலை 22, 2014 12:00 AM
ADDED : ஜூலை 22, 2014 10:59 AM
போபால்: பாலியல் பலாத்கார சம்பவங்களில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையிலான கருவியை மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுஷாந்த் பட்நாயக் என்ற இன்ஜினியரிங் மாணவர், பலாத்கார சம்பவங்களில் இருந்து பெண்களை பாதுகாக்க இரண்டு புதிய கருவிகளை கண்டுபிடித்துள்ளார். இதில் ஒரு கருவிக்கு இரும்பு மனிதன் கை என பெயர் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இரும்பால் செய்யப்பட்ட கையுறை போன்ற இந்த கருவியை பயன்படுத்தி எதிரியை தாக்கினால், எதிரிக்கு சில நிமிடங்கள் கண் பார்வை தெரியாமல் போய் விடும். இந்த அவகாசத்தை பயன்படுத்தி பெண்கள் தப்பித்து விடலாம். இந்த கருவியின் விலை 5,000 ரூபாய். இந்த கருவியில் ஆபத்து நேரத்தில் எச்சரிக்கை ஒலி எழுப்பும் வசதியும் உள்ளது.
மேலும் ரக்ஷா பாண்ட் என்ற கருவியையும் கண்டுபிடித்துள்ளேன். வளையம் போன்ற இந்த கருவியை கையில் அணிந்து கொண்டு எதிரிகளை தொட்டால், அவர்களுக்கு ஷாக் அடிக்கும். இந்த கருவி மூலமாக புகைப்படம் எடுக்கவும், போலீசாருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும் முடியும். இதன்விலை 2,000 ரூபாய். இந்த கருவிகள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
