அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்த ஆய்வகக் கட்டடங்கள்
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்த ஆய்வகக் கட்டடங்கள்
UPDATED : ஜூலை 23, 2014 12:00 AM
ADDED : ஜூலை 23, 2014 11:50 AM
திருத்தணி : அரசு மேல்நிலைப்பள்ளியில் பல ஆண்டுகளாக பழுதடைந்த இரு ஆய்வக கட்டடங்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன.
திருத்தணி ஆறுமுக சுவாமி கோவில் தெருவில் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 2,300 மாணவியர் படித்து வருகின்றனர். மேனிலைப் பள்ளி மாணவர்கள் அறிவியல் பாடங்கள் சம்பந்தமாக செய்முறைகள் செய்வதற்கு இரண்டு ஆய்வக கட்டடங்கள் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
இக்கட்டடம் பழுதடைந்ததால் ஐந்து ஆண்டுகளாக மாணவியர் பயன்படுத்தாமல் உள்ளனர். மேலும் இக்கட்டடத்தின் பல பகுதிகள் விரிசல் அடைந்தும், மேற்கூரையின் மீது செடிகள் வளர்ந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலை உள்ளது.
தற்போது ஒரு கட்டடத்தில் அறிவியல் மாணவியர் செய்முறை பயிற்சி மேற்கொள்கின்றனர். பள்ளி வளாகத்தில் பழுதடைந்த இரண்டு கட்டடங்களை பொதுப்பணி துறையினர் இடித்து புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கோரிக்கை மனு கொடுத்தும், நேரிலும் பலமுறை ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். ஆனால் பொதுப்பணி துறையினர் ஆய்வக கட்டடங்களை இடிக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
எனவே மாணவியருக்கு அசம்பாவிதம் ஏற்படும் முன் பழுதடைந்த இரு கட்டடங்களை இடிக்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் மாணவியர் எதிர்பார்க்கின்றனர்.
