3 மீடியா கல்வி நிறுவனங்களுக்கு விரைவில் புதிய அந்தஸ்து?
3 மீடியா கல்வி நிறுவனங்களுக்கு விரைவில் புதிய அந்தஸ்து?
UPDATED : ஜூலை 23, 2014 12:00 AM
ADDED : ஜூலை 23, 2014 01:04 PM
புதுடில்லி: இந்திய பிலிம் அன்ட் டெலிவிஷன் கல்வி நிறுவனம்(FTII), சத்யஜித்ரே பிலிம் அன்ட் டெலிவிஷன் கல்வி நிறுவனம்(SRFTI) மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்(IIMC) ஆகியவை, விரைவில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக உயர்த்தப்படவுள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய அமைச்சரவையிடம், இதுதொடர்பான செயல்திட்டத்தை, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை முன்மொழிந்துள்ளது. இந்த கோரிக்கை, கடந்த ஆட்சியில், ஏற்கனவே பல்லாண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, புதிய ஆட்சியில், இதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டால், அந்த முடிவிற்கு, நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும். அதன்பிறகு, மேற்கண்ட 3 நிறுவனங்களும், ஐ.ஐ.டி.,கள் மற்றும் எய்ம்ஸ் கல்வி நிறுவனங்களின் வரிசையில் இடம்பெறும்.
அந்த 3 கல்வி நிறுவனங்களும், மீடியா துறையில், முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக இருந்தபோதிலும், சிறப்பு அந்தஸ்து இல்லாததால், அவை வெறும் டிப்ளமோ படிப்புகளை மட்டுமே வழங்கி வந்தன. சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், பட்டங்களை வழங்கும் அதிகாரத்தைப் பெறுவதுடன், உள்கட்டமைப்பை மேம்படுத்தி, தேவையான நிதி ஆதாரத்தையும் பெற முடியும்.
