கல்வி உதவித்தொகை கையாடல் விவகாரம்: பள்ளிகளில் இன்று அதிகாரிகள் தணிக்கை
கல்வி உதவித்தொகை கையாடல் விவகாரம்: பள்ளிகளில் இன்று அதிகாரிகள் தணிக்கை
UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM
ADDED : ஜூலை 24, 2014 01:56 PM
திருச்சி: திருவெறும்பூர் ஒன்றியத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கையாடல் செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக, இன்று அதிகாரிகள் பள்ளிகளில் தணிக்கை செய்ய உள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியத்திலுள்ள பள்ளிகளில் பயிலும் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை 5.25 லட்சம் ரூபாய், ஆசிரியர்களுக்கான ஊரக அஞ்சலக சேமிப்பு திட்ட தொகையில் 1.25 லட்சம் ரூபாய், துப்புரவு பணியாளர்களின் குழந்கைதகளுக்கான உதவித்தொகை 55 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ஏழு லட்சத்து 5,000 ரூபாயை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் முத்துக்கிருஷ்ணன் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.
உதவித் தொகைக்கான காசோலைகளை திருப்பி அனுப்பிய வங்கிகளில் விசாரித்த போது, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் முத்துக்கிருஷ்ணன் அந்த பணத்தை கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் நீலகண்டன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செல்வனிடம் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக அதிகாரிகள் முதல் கட்ட விசாரணையை முடித்து, நேற்று மாலை மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீயிடம் அறிக்கை கொடுத்துள்ளனர்.
கல்வி உதவித்தொகையை கையாடல் செய்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் முத்துக்கிருஷ்ணன் தற்போது தலைமறைவாக உள்ளார்.
இது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் செல்வன் கூறியதாவது: திருவெறும்பூர் ஒன்றியத்தில் கல்வி உதவித்தொகை கையாடல் குறித்த புகாரை விசாரித்து வருகிறோம். நாளை (இன்று) அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று தணிக்கை செய்ய உள்ளனர்.
தணிக்கை அதிகாரிகளின் தணிக்கை அறிக்கை, மாவட்ட கலெக்டர் மற்றும் துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, முத்துக்கிருஷ்ணன் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
