ஹீமோபீலியா மற்றும் புற்றுநோய் பாதிப்பு குழந்தைகளுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சி
ஹீமோபீலியா மற்றும் புற்றுநோய் பாதிப்பு குழந்தைகளுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சி
UPDATED : ஜூலை 25, 2014 12:00 AM
ADDED : ஜூலை 25, 2014 11:17 AM
சென்னை: ஹீமோபீலியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளின் சிகிச்சைக்கு நிதி திரட்டும் வகையில், சென்னை, போரூர் ராமச்சந்திரா அரங்கில், திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடக்கிறது.
ஹீமோபீலியா - ரத்த கசிவு மற்றும், புற்றுநோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் ஆராய்ச்சி நோக்கில், சென்னையில், டியாரா ஹீமோபீலியா மற்றும் புற்றுநோய் அறக்கட்டளை - டி.எச்.சி.எப்., செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, ஹீமோபீலியா, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, ஏழைக் குழந்தைகளின் சிகிச்சைக்காக, போரூர் ராமச்சந்திரா மருத்துவ பல்கலையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஏழைக் குழந்தைகளின் சிகிச்சைக்கு, நிதி திரட்டும் வகையில், திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி, நாளை மாலை, 6:45 மணிக்கு, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை, ஆடிட்டோரியத்தில் நடக்கிறது.
ராமச்சந்திரா மருத்துவமனை, குழந்தைகள் புற்று நோய் நிபுணர் ஜூலியஸ் கூறுகையில், "இந்தியாவில், 10 ஆயிரம் பேருக்கும், தமிழகத்தில், 1,400 பேருக்கும் ரத்தக்கசிவு நோய் உள்ளது. இது, மரபுரீதியாக வருகிறது. ஒரு முறை சிகிச்சை பெற, 10 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஏழைக் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க, டியாரா அமைப்புடன் இணைந்துள்ளோம். இது நல்ல தொடக்கமாக இருக்கும், என்றார்.
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பேசுகையில், "சமூக நோக்குடன் நடக்கும் இந்த முயற்சியில், என்னையும் இணைத்துக் கொண்டதில் மகிழ்ச்சி" என்றார்.
