தியாகியின் பேத்திக்கு மருத்துவ படிப்பில் இடம் வழங்கக்கோரி வழக்கு
தியாகியின் பேத்திக்கு மருத்துவ படிப்பில் இடம் வழங்கக்கோரி வழக்கு
UPDATED : ஜூலை 29, 2014 12:00 AM
ADDED : ஜூலை 29, 2014 11:49 AM
சென்னை: சுதந்திரப் போராட்ட வீரரின் பேத்திக்கு, எம்.பி.பி.எஸ்., படிப்பில் இடம் ஒதுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூரைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் தாக்கல் செய்த மனு: என் தந்தை வெங்கடேசன் சுதந்திரப் போராட்ட வீரர்; 1991ல் இறந்தார். அதுவரை, தியாகிகளுக்கான பென்ஷன் பெற்று வந்தார். அவரது மறைவுக்குப் பின் என் தாயார் பென்ஷன் தொகை பெற்றார்.
என் மகள், கீர்த்தனா, பிளஸ் 2 தேர்வில் 988 மதிப்பெண் பெற்றுள்ளார். எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு தியாகிகளின் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்தார். ஆனால், ஜாதி ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது. தியாகிகளின் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டின் கீழ், மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தியாகியின் பேத்தி என்பதால் என் மகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. தியாகியின் மகன், மகளுக்கு மட்டுமே ஒதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்கப்படும் என்றும், பேரன், பேத்திக்கு தகுதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி பார்த்தால், ஒதுக்கீட்டின் கீழ் யாருக்கும் இடம் கிடைக்காது. தியாகியின் மகன், மகளுக்கு 50 வயதுக்கு மேல் இருக்கும். இந்த வயதில் மருத்துவப் படிப்பில் இடம் கேட்டு யாரும் வர மாட்டார்கள். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தியாகியின் வாரிசுகளுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. அங்கு என் மகளின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது.
ஜாதி அடிப்படையில் பரிசீலிப்பதற்கு பதில், தியாகியின் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டின் கீழ், விண்ணப்பத்தை பரிசீலித்திருக்க வேண்டும். ஒரு பல்கலைக்கழகம் பரிசீலிக்கும் போது, மற்ற பல்கலைக்கழகமும் பரிசீலிக்க வேண்டும். எனவே, தியாகியின் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டின் கீழ், என் மகளுக்கு எம்.பி.பி.எஸ்., படிப்பில், இடம் ஒதுக்க வேண்டும்.
மனு மீதான விசாரணை முடியும் வரை, ஒரு இடத்தை காலியாக வைக்க வேண்டும். தியாகியின் குழந்தைகளுக்கு மட்டுமே ஒதுக்கீடு என மருத்துவப் படிப்புக்கான விளக்க குறிப்பேட்டில் உள்ளதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இம்மனு, நீதிபதி சத்தியநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்க மருத்துவக் கல்வி இயக்குனரகம் சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய் காந்தி நோட்டீஸ் பெற்றுக் கொண்டார்.
