தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிக்கான இடத்தில் மண்டல அலுவலகம் கட்டும் முயற்சியில் மாநகராட்சி

பள்ளிக்கான இடத்தில் மண்டல அலுவலகம் கட்டும் முயற்சியில் மாநகராட்சி

பள்ளிக்கான இடத்தில் மண்டல அலுவலகம் கட்டும் முயற்சியில் மாநகராட்சி


UPDATED : ஜூலை 31, 2014 12:00 AM

ADDED : ஜூலை 31, 2014 12:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 31, 2014 12:00 AM ADDED : ஜூலை 31, 2014 12:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பழைய பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு, மண்டல அலுவலகம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சியின் செயல், கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி, ஆறாவது மண்டல அலுவலகம், தற்போது அயனாவரத்தில் இயங்கி வருகிறது. பழைய கட்டடத்தில், குறுகலான இடத்தில் உள்ள மண்டல அலுவலகத்திற்கு, நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு, 14 ஆயிரத்து 880 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய மண்டல அலுவலகம் கட்ட, ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

வாக்குறுதி காற்றில்...

மாநகராட்சி, தேர்வு செய்துள்ள இடம், துவக்க பள்ளி இயங்கி வந்த இடமாகும். அங்கு கடந்த 2009ம் ஆண்டு வரை துவக்க பள்ளி இயங்கி வந்தது. மாணவர் சேர்க்கை குறைவை காரணம் காட்டி, கடந்த 2009ம் ஆண்டு 30 பள்ளிகள் மூடப்பட்டன. அதில் ஒரு பள்ளி தான் அது. பள்ளிகளை மூடியபோது, கடும் எதிர்ப்பு எழுந்தது.

அப்போது, முன்னாள் மேயர், மா.சுப்பிரமணியன், பள்ளிகள் மூடப்பட்டாலும், அந்த இடம் ஏழை மாணவர்களின் கல்விக்காக, மட்டுமே பயன்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, மூடப்பட்ட பள்ளி கட்டடங்களை இடித்து விட்டு, அங்கு மற்ற அரசு அலுவலகங்கள் கட்டப்படுவது வாடிக்கையாக மாறிவிட்டது.

வாடகைக்கு எடுக்கும் நிலை: சிந்தாதிரிபேட்டையில் துவக்க பள்ளி கட்டடம், சமூக நலத்துறை அலுவலகமாக மாறியது. தற்போது ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் துவக்க பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு, விசாலமான மண்டல அலுவலகம் கட்ட 7.92 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. விரைவில், அதற்கான பணி களும் துவங்க உள்ளன.

அவ்வாறு பள்ளிகள் இயங்கி வந்த இடங்களை, மற்ற பயன்பாடுகளுக்கு மாநகராட்சி பயன்படுத்தினால், எதிர்காலத்தில் கல்வி தேவைக்கு இடம் கிடைக்காமல், தனியார் இடங்களை வாடகைக்கு எடுக்கும் நிலை வரும் என, கல்வியாளர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். மாநகராட்சி பள்ளிகளுக்கான இடத்தை, அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "மூடப்பட்டுள்ள பள்ளி இடம் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடமாகவே கருதப்படும். அதை மாநகராட்சி பயன்பாட்டிற்கு எடுத்து கொள்வதில் எந்த முறைகேடும் இல்லை" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us