உடுமலை, தாராபுரத்தை உள்ளடக்கிய புதிய கல்வி மாவட்டம் உருவாகுமா?
உடுமலை, தாராபுரத்தை உள்ளடக்கிய புதிய கல்வி மாவட்டம் உருவாகுமா?
UPDATED : ஆக 01, 2014 12:00 AM
ADDED : ஆக 01, 2014 12:26 PM
உடுமலை: திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு, பல ஆண்டுகளாகியும், உடுமலை, தாராபுரத்தை உள்ளடக்கிய கல்வி மாவட்டம் ஏற்படுத்தப்படும் என்ற அரசு அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது, கல்வியாளர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை வருவாய் கோட்டத்தில், 136 அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் கட்டமைப்பு மேம்பாடு, தேர்ச்சி சதவீதம் அதிகரித்தல் உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டு வருகிறது. இதற்கு, மாவட்ட கல்வித்துறையின் முழுமையான கண்காணிப்பு நேரடியாக உடுமலை பகுதி பள்ளிகளுக்கு கிடைக்காதது முக்கிய காரணமாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வாக, உடுமலை, தாராபுரத்தை உள்ளடக்கி, புதிய கல்வி மாவட்டம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு வருகிறது. பள்ளி தொடர்பான பிரச்னைகள், தேர்வுகள் நடத்த ஆலோசனை, மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகை, பள்ளியின் தரம் பற்றிய விவரங்கள் உட்பட அனைத்து பணிகளுக்கும், திருப்பூருக்கு செல்ல வேண்டிய நிலை உடுமலை பள்ளி நிர்வாகிகளுக்கு உள்ளது.
இதனால், பணிச்சுமை அதிகரித்து, மாணவர்கள் மீது முழு கவனம் செலுத்த முடியாமல், ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தின் கீழ் உடுமலை பகுதி இருந்தபோது, ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி மாணவர்களுக்கும் வசதியாக இருந்தது. புதிய கல்வி மாவட்டம் அமைக்காதது, மாணவர்களுக்கும் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது.
கல்வியாளர்கள் கூறுகையில், "மாவட்ட கல்வித்துறை மூலம் பள்ளிகளில் முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்படுவதில்லை. உடுமலை கல்வி மாவட்டமாக அமைக்கப்பட்டால் மட்டுமே, கல்வித்துறையின் முழு கவனம் பள்ளிகளின் மீது திரும்பும். மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்படுவதற்கும், ஆசிரியர்கள் திருப்பூர் வரை சென்று எடுத்து வர வேண்டியுள்ளது.
ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுவதால், மாணவர்களின் மீதான கவனம் குறைகிறது. பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் கல்வி இயக்கம், இப்பிரச்னையால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு தேவைக்கும் திருப்பூர் செல்வதால், ஒரு நாளே வீணாகிறது" என்றனர்.
