உண்டு உறைவிட பள்ளிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு அநீதி
உண்டு உறைவிட பள்ளிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு அநீதி
UPDATED : ஆக 06, 2014 12:00 AM
ADDED : ஆக 06, 2014 11:09 AM
கிருஷ்ணகிரி: மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உண்டு உறைவிட பள்ளிகளில் தங்கி படிப்போருக்கு, தமிழக அரசு வழங்கும் இலவச சீருடை மற்றும் கல்வி உபகரண பொருட்களை இதுவரை வழங்காததால், மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் மாணவ, மாணவிகள் வேலைக்கு செல்லும் நிலை, மலை கிராமங்களில் பரவலாக காணப்படுகிறது. மேலும், ஆதரவற்ற குழந்தைகளும், பள்ளிக்கு செல்லாமல் கிடைக்கும் கூலி வேலைக்கு சென்று வந்தனர். இதன்காரணமாக, மாவட்டத்தில் பள்ளியில் இடைநிற்றல் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
இதனை தடுக்கும் வகையில், மாவட்டத்தில் உண்டு உறைவிடப் பள்ளிகள் துவங்கப்பட்டது. இதனை, தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் நிர்வகித்து வருகின்றனர். இதற்காக, உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி படிக்கும், ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் சாப்பாடு மற்றும் இதர தேவைக்களுக்காக, நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட தொகை அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தற்போது, செயல்பட்டு வரும், 10 உண்டு உறைவிடப்பள்ளிகளில், 500 குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர். இங்கு, இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் தங்கி படிக்கின்றனர்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, தமிழக அரசு ஆண்டுதோறும் நான்கு செட் இலவச சீருடை மற்றும் இலவச பேக், காலணி, எழுது பொருட்கள் போன்ற கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், உண்டு உறைவிட பள்ளிகளில் தங்கி படிக்கும் குழந்தைகளுக்கும், அரசு இலவச சீருடை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது. இந்த பொருட்கள், கல்வியாண்டில் பள்ளி துவங்கிய சில நாட்களில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் வழங்கப்படும்.
இந்த ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவச சீருடை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு விட்டது. ஆனால், ஆதரவற்ற குழந்தைகள் உள்ள உண்டு உறைவிடப்பள்ளிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, இதுவரை இலவச சீருடை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்படவில்லை.
ஏற்கனவே, வறுமையால், உண்டு உறைவிடப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகள், அரசின் இலவச சீருடைகள் கிடைக்காததால், கடந்த ஆண்டு கொடுத்த கிழிந்த துணிகளை அணியும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, கல்வித்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, உண்டு உறைவிடப்பள்ளியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, காலணி, மற்றும் கல்வி உபகரணங்களை வழங்க வேண்டுமென, மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
