குழந்தைகள், மகளிர் காப்பகங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்ட முன்வடிவு
குழந்தைகள், மகளிர் காப்பகங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்ட முன்வடிவு
UPDATED : ஆக 09, 2014 12:00 AM
ADDED : ஆக 09, 2014 05:01 PM
சென்னை: குழந்தைகள், மகளிர் விடுதிகள் மற்றும் காப்பகங்களை ஒழுங்குபடுத்த, புதிய சட்ட முன்வடிவு, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இச்சட்டப்படி, காப்பகங்களை பதிவு செய்யத் தவறினால், இரண்டு ஆண்டு சிறை தண்டனையோடு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
குழந்தைகள் காப்பகம்: சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் வளர்மதி, தாக்கல் செய்த சட்ட முன்வடிவு: புதிய சட்டம், தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம் - 2014 என அழைக்கப்படும்.
இச்சட்டம் அமலுக்கு வருவதற்கு முன், துவங்கப்பட்ட காப்பகங்களையும், இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும். வேறு சட்டங்களின் கீழ் துவங்கப்பட்ட காப்பகங்களும், இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
புறக்கணிக்கப்பட்ட மகளிர், குழந்தைகள் காப்பகம், சீர்திருத்தப் பள்ளிகளுக்கு இச்சட்டம் பொருந்தாது. காப்பகங்களை துவங்குவோர் மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
சட்ட விதிகளுக்கு உட்பட்டு காப்பகம் இருப்பதாக, கலெக்டர் மனநிறைவு அடையும்போது, காப்பகங்களை பதிவுசெய்து, அதற்கான சான்றிதழை வழங்குவார்.
காப்பகத்தில், பெண் மேலாளரை நியமிக்க வேண்டும். அவரது நடத்தைக்கு, போலீசார் விசாரணை சான்று அளிக்க வேண்டும். ஒவ்வொரு 50 பேருக்கும் ஒரு மேலாளரை நியமிக்க வேண்டும்.
காப்பகங்களில் உருவாகும் குப்பை கழிவுகளை அகற்றி வைக்க, காப்பகத்தில் தனி இடம் இருக்க வேண்டும். காப்பகங்களில் தீயணைப்பு கருவிகளை வைத்திருக்க வேண்டும். விபத்து காலங்களில் வெளியேற அவசர வழி இருக்க வேண்டும்.
படுக்கை அறை தவிர, காப்பகத்தின் பிற பகுதிகளில், தூங்க அனுமதிக்கக் கூடாது. தொற்று நோயாளிகளை காப்பகத்தில் அனுமதிக்கக் கூடாது. காப்பகம் தங்குவதற்கு தகுதியானது என உரிய அதிகார அமைப்பினால் சான்று பெற வேண்டும்.
பெண் குழந்தைகள் மற்றும் மகளிர் தங்க, தனித்தனி அறைகள் இருக்க வேண்டும். சிறுவர், சிறுமியரை ஒரே அறையில் தங்க வைக்கக் கூடாது. காப்பகத்தின் நுழைவாயிலில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
காப்பகத்துக்கு, 24 மணி நேர பாதுகாப்பு அளிக்க, உரிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். இவர்களில், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
உள்ளூர் காவல் நிலையத்தில் சரிபார்த்த பின்பே, காவல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். காப்பகங்களில், வருகைப் பதிவேடு பராமரித்து, காப்பகத்துக்கு வந்து செல்வோரின் வருகையை அதில் பதிய வேண்டும்.
காப்பகத்தில் தங்குவோரின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வமான காப்பாளருக்கு, புகைப்படத்துடன் கூடிய, அடையாள அட்டை வழங்க வேண்டும்.
புதிய காப்பக சட்டப்படி, விடுதியை பதிவு செய்யாத, அதன் உரிமையாளருக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
விடுதியை பதிவு செய்ய தொடர்ந்து தவறினால், மூன்றாண்டு சிறை தண்டனையுடன், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
விடுதிகளின் நிலை குறித்து அறிய, மாவட்ட கலெக்டர் அல்லது அவரால் எழுத்து வடிவில், அதிகாரம் அளிக்கப்பட்ட அலுவலர், காப்பகத்தினரிடம் அறிக்கை கோரலாம்.
பெண்கள், குழந்தைகள் நலனுக்கு, அரசு முழுமையாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. எனவே, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இச்சட்டம் இயற்றப்படுகிறது. இவ்வாறு, சட்ட முன் வடிவில் கூறப்பட்டுள்ளது.
விடுதிகளுக்கும் பொருந்தும்: அரசு வட்டாரங்களில், விசாரித்த போது, அரசு நடத்தும் குழந்தைகள் சீர்திருத்த பள்ளிகளை தவிர, பிற அனைத்து குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் விடுதிகளுக்கு, இச்சட்டம் பொருந்தும். குறிப்பாக, பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதிகளும், இச்சட்டத்தின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டது.
