UPDATED : ஆக 18, 2014 12:00 AM
ADDED : ஆக 18, 2014 12:53 PM
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்கு, சொந்த கட்டடம் இல்லாததால், சிறிய வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதனால் அலுவலகத்திற்கு வந்து செல்ல ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்.
குஜிலியம்பாறை ஒன்றியத்தில், 98 தொடக்க, நடுநிலை பள்ளிகள் உள்ளன. இவற்றில் 300க்கும் மேற்ப்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இப்பள்ளிகளுக்கான நோட்டு, புத்தகங்கள், சீருடைகள் தொடக்க கல்வி அலுவலகம் மூலமே வழங்கப்படுகின்றன. ஆனால், தொடக்க கல்வி அலுவலகத்தில் போதிய இடம் இல்லாததால், குஜிலியம்பாறையில் செயல்படும் வட்டார வளமைய கட்டடத்தில், இப்பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றன.
மேலும், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், பிற பணிகளுக்காக அலுவலகங்களுக்கு ஆசிரியர்கள் செல்லும்போதும், இட நெருக்கடி ஏற்படுகிறது. இங்கு போதிய இடவசதி இல்லாதால், இரண்டு உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், இரண்டு எழுத்தர்கள், ஒரு சூப்பர் வைசர் ஆகியோர் இட நெருக்கடியில் தவிக்கின்றனர். குஜிலியம்பாறை உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்கு, போதிய கட்டட வசதிகளை செய்துதர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
