பஸ் வசதி இல்லாததால் 2 கி.மீ தூரம் கல்லூரிக்கு நடை பயணம்
பஸ் வசதி இல்லாததால் 2 கி.மீ தூரம் கல்லூரிக்கு நடை பயணம்
UPDATED : ஆக 18, 2014 12:00 AM
ADDED : ஆக 18, 2014 01:22 PM
பரமக்குடி: போதிய பஸ் வசதி இல்லாததால் பரமக்குடியில் இருந்து 2 கி.மீ., தூரம் அரசு கல்லூரிக்கு நடந்து செல்லும் பரிதாப நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலை பயணத்தால் விபத்து அபாயம் நீடிக்கிறது.
பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தொலைவில் அரசு கல்லூரி உள்ளது. கல்லூரி நாட்களில் காலை மற்றும் மதிய வேளையில் இரண்டு ஷிப்ட் -ஆக செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் மொத்தம் 1,700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பரமக்குடி, போகலூர், நயினார்கோவில் ஒன்றியங்களில் இருந்து வருகின்றனர்.
தவிர, பரமக்குடி நகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். பள்ளி, கல்லூரி செயல்படும் இடத்தில் இருந்து 35 கி.மீ., தொலைவுக்குள் இருக்கும் மாணவ, மாணவியருக்கு பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. கிராமப்புற மாணவர்கள் இந்த பாஸ் மூலம் பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் வரை மட்டுமே வரமுடியும். அதன்பிறகு காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லாததால் 2 கி.மீ., தூரமுள்ள அரசு கல்லூரிக்கு மாணவர்கள் நடந்தே சென்று வரும் பரிதாப நிலை உள்ளது.
பல்வேறு போராட்டங்களுக்கு பின் 2004 ல், கல்லூரி அருகே பஸ் ஸ்டாப் வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இன்று வரை கல்லூரிக்கு என்று சிறப்பு பஸ்கள் இயக்கப்படவில்லை. இவ்வழியாக செல்லும் டவுன் பஸ்களும் கல்லூரி ஸ்டாப்பில் நிற்பது இல்லை. இதனால் மாணவர்கள் கல்லூரிக்கு தினமும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
போக்குவரத்து மிகுந்த தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பதால், மாணவர்களுக்கு விபத்து அபாயம் நீடிக்கிறது. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் கல்லூரிக்கு பயணிக்க வேண்டியுள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி இப்பகுதியில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
