தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆற்றில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்களை காக்க மேம்பாலம் அமையுமா?

ஆற்றில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்களை காக்க மேம்பாலம் அமையுமா?

ஆற்றில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்களை காக்க மேம்பாலம் அமையுமா?


UPDATED : ஆக 19, 2014 12:00 AM

ADDED : ஆக 19, 2014 12:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2014 12:00 AM ADDED : ஆக 19, 2014 12:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரியாபட்டி: காரியாபட்டி கணக்கனேந்தல் கிராமத்தில் இருந்து உயர் வகுப்பிற்கு ஜோகில்பட்டிக்கு செல்லும் பள்ளி மாணவர்கள் 2 கி.மீ., தூரம் நடக்க வேண்டியது உள்ளது.

அதில் அரை கி.மீ., தூரம் ஆற்றில் இறங்கி நனைந்தபடி செல்லும் அவலம் நிலவுகிறது. மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்பட்டால் 9 கி.மீ., தூரம் சுற்றி மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே ஆற்றைக்கடக்க மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர்.

காரியாபட்டி ஜோகில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கணக்கனேந்தலில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊரை சுற்றி சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து இருப்பதால் எந்த அசம்பாவிதங்கள் நடந்தாலும் தெரியாது. அந்தளவிற்கு தனி தீவு போல இக்கிராமம் அமைந்துள்ளது.

ஆற்றில் நனைந்து செல்லும் அவலம்: உள்ளூரில் மாணவர்கள் கல்வி கற்க, ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. உயர் வகுப்பிற்கு 2 கி.மீ.,தூரத்தில் உள்ள ஜோகில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டும். அதில் அரை கி.மீ., தூரம் ஆற்றைக் கடக்க வேண்டும். இந்த இரு ஊர்களுக்கும் இடையில் குண்டாறு செல்கிறது. ஆற்றில் கிடந்த மணல்கள் முற்றிலும் அள்ளப்பட்டதால் ஆங்காங்கே பள்ளம் பள்ளமாக உள்ளன.

நிரந்தரமான பாதை இல்லாததால் அவ்வப்போது ஏதாவது ஒரு வழியில் நடந்து செல்ல நேரிடுகிறது. பாதை தெரியாமல் மாணவர்கள் பலமுறை தவறி விழுந்து விபத்து நடந்துள்ளது. செப்டம்பர், அக்டேபாரில் வடகிழக்குபருவமழை பெய்யும்போது, ஆற்றில் திடீர் வெள்ளம் வந்துவிடுமோ என பயந்து பயந்து செல்கின்றனர்.

சிறிது தண்ணீர் வந்தாலும் கல்குறிச்சி, கரியனேந்தல் வழியாக 9 கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலையில் மாணவர்கள் உள்ளனர். அவசர தேவைக்கு எந்த வாகனங்களும் வரமுடியாத நிலை இருப்பதால் சம்பந்தப்பட்ட நோயாளிகளை சுமந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் கிராமத்தினர் உள்ளனர்.

தேவை மேம்பாலம்: நேற்று முன்தினம் பெய்த சிறிதளவு மழைக்கு ஆற்று பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் மாணவர்கள் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர்.

மாலையில் வீடு திரும்பியபோதும் இதே அவதிதான். ஆகவே மாணவர்கள், இக்கிராம மக்களின் நலன் கருதி குண்டாற்றின் குறுக்கே அரைக்கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்ட வேண்டும் அக்கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இது தங்களின் பல ஆண்டு கோரிக்கை என அவர்கள் கூறுகின்றனர்.

பெரியசாமி கணக்கனேந்தல், "எங்கள் ஊரை சுற்றி சீமைக்கருவேல மரங்கள் இருப்பதால் ஊர் இருக்கும் அடையாளமே தெரியாது. பள்ளி உயர் வகுப்பிற்காக 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜோகில்பட்டிக்கு தினமும் இந்த ஆற்றை கடந்து செல்ல வேண்டும். குண்டும் குழியுமாக இருக்கும் இடங்களை கடந்து செல்ல நேரிடுவதால் விபத்தில் சிக்குகின்றனர்.

சிறிதளவு தண்ணீர் வந்தால்கூட புத்தக பைகளை சுமந்து கொண்டு பள்ளத்தை கடக்க படாதபாடு படுகின்றனர். இவர்களது நலனை கருத்தில் கொண்டாவது ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us