தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிக்கு தடை - எந்தளவுக்கு நன்மை?

தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிக்கு தடை - எந்தளவுக்கு நன்மை?

தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிக்கு தடை - எந்தளவுக்கு நன்மை?


UPDATED : ஆக 20, 2014 12:00 AM

ADDED : ஆக 20, 2014 10:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2014 12:00 AM ADDED : ஆக 20, 2014 10:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், தற்போது ஏழு அரசு சட்டக் கல்லூரிகளும், சேலத்தில் ஒரே ஒரு தனியார் சட்டக் கல்லூரியும் இயங்கி வருகின்றன. இதுதவிர, அம்பேத்கர் சட்டப் பல்கலையில் சிறப்பு சட்டப்பள்ளியும், ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப்பள்ளியும் இயங்கி வருகின்றன.

மாணவர் சேர்க்கை

ஆண்டுதோறும், இவற்றில் 1,492 பேர், பி.ஏ.பி.எல்., பி.ஏ.பி.எல்., ஹானர்ஸ் பி.காம். பி.எல்., ஆகிய படிப்புகளில் கலந்தாய்வு மூலம் சேர்க்கப்படுகின்றனர். இதுதவிர, மூன்றாண்டு பி.எல்., படிப்பிலும் மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு வாயிலாக நடக்கிறது.
இந்த நடைமுறை, அரசு கல்லூரியில் மட்டுமே. சேலத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் அரசு சார்பிலான சேர்க்கை நடப்பதில்லை.

இவை தவிர, சென்னையில் எஸ்.ஆர்.எம்., சவீதா வேலூர், வி.ஐ.டி., தஞ்சை சாஸ்த்ரா ஆகிய நிகர்நிலை பல்கலைகளிலும், சட்ட பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

அரசு மற்றும் தனியார், நிகர்நிலை பல்கலை என அனைத்து கல்வி நிறுவனங்களுமே, அகில இந்திய பார் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றே இந்த கல்வி நிறுவனங்களை நடத்துகின்றன.

இவற்றில், மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில், புதிய தனியார் சட்டக் கல்லூரிகள் துவக்கப்படுவதை தடுக்க, சமீபத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்த சட்டத்தில், குறைந்த செலவில், தரமான சட்டக் கல்வியை வழங்குவதற்கு, படிப்படியாக, அரசு சட்டக் கல்லூரிகளை நிறுவுவதற்கு கொள்கை முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக நலிவுற்ற பிரிவினருக்கு, தனியாரால், தரமான சட்டக் கல்வியை அளிக்க முடியாதது, தனியாரால் திறம்படத் தொடர்ந்து நிர்வாகம் செய்ய முடியததாலும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது.

அதே நேரத்தில், இந்த சட்டம், யு.ஜி.சி., அங்கீகாரத்தை பெற்று இயங்கும் நிகர்நிலை பல்கலைகளுக்கு பொருந்தாது என, கூறப்படுகிறது.

நிகர்நிலை பல்கலைகளில், சட்டக்கல்வி குறித்து, எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தர் பச்சமுத்து கூறியதாவது: தமிழகத்தில், சட்டக் கல்லூரிகளை தனியார் நடத்த அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கக்கூடியது. தனியார், சட்டக் கல்லூரிகளை நடத்தும்போது, அதன் கல்வித்தரம் எந்தளவுக்கு இருக்கும் என்பதை சொல்ல முடியாது.

அதோடு, கல்விக் கட்டணமும் கூடுதலாக இருக்கும் என்பதாலும், தமிழக அரசு, அதற்கு அனுமதி மறுத்துள்ளது. ஆனால், எங்களைப் போன்ற தனியார் பல்கலைகள், சட்ட படிப்புகளை தொடங்க, பார் கவுன்சில் ஆப் இந்தியா முறைப்படி அனுமதி வழங்கி இருக்கிறது. அது வகுத்துத் தந்திருக்கும் அடிப்படையில்தான், பாட திட்டங்கள் இருக்கும். தமிழக அரசின் சட்ட பாடத் திட்டங்களை விட, கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும்.

கட்டணமும், பார் கவுன்சில் அறிவுறுத்தி இருப்பது போல்தான் வசூலிக்கப்படுகிறது. அதனால், தனியார் பல்கலையின் மூலம் நடத்தப்படும் சட்ட படிப்பில் சேர, மாணவர்கள் ஆர்வமுடன் வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

அதேநேரம், "மாணவர்கள் ஆர்வம் காரணமாக, அரசு சட்டக் கல்லூரிக்கான தேவை அதிகரித்துள்ளதாக" அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர் வணங்காமுடி தெரிவித்துள்ளார்.

நலிவடைந்தவர்களுக்கு...

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: தமிழகத்தில், தனியார் சட்டக் கல்லூரி தடைச் சட்டம் தேவையான ஒன்று. அரசு சட்டக் கல்லூரிகளின் தேவை குறித்து, கடந்த மூன்று ஆண்டுகளில் மாணவர் சேர்க்கையை ஆய்வு செய்தால் தெளிவாகும். அரசு சட்டக் கல்லூரிகள் மட்டுமே, பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு, ஆண்டுக்கு 2,000 ரூபாய் கட்டணத்தில் சட்டக்கல்வியை வழங்கி வருகிறது.

இதன்மூலம், ஐந்தாண்டு சட்டக் கல்வியை ஒரு மாணவர் 10,000 ரூபாய் கட்டணத்தில் படித்து முடித்து விடலாம். அகில இந்திய பார் கவுன்சில் பரிந்துரைத்துள்ள பாடங்களையே அரசு சட்டக்கல்லூரிகள் நடத்துகின்றன.

சட்டக்கல்வி வர்த்தகமயமாகியுள்ள இந்த சூழலில், லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி, தனியார் கல்லூரிகளில் படிக்க முடியாததால், சமூக நீதி அடிப்படையில், அரசு இம்மாதிரியான முடிவை எடுத்துள்ளது.

மேலும், அரசு சட்டக்கல்லூரிகளை துவக்க ஏதுவாக, தனியார் சட்டக் கல்லூரிகள் தடைச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது புரட்சிகரமான முடிவு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஒருபுறம் இந்த சட்டத்தை, பல்வேறு தரப்பினர் ஆதரித்தாலும், இந்த சட்டம் குறித்த விமர்சனங்களும் உள்ளன.

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு இந்த சட்டம் குறித்து கூறியிருப்பதாவது: தனியார் கல்வி நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணம் அதிகம் என்பதால், அவை சட்டக் கல்லூரிகள் நிறுவ தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறுவது வலுவற்ற வாதம்.

இரண்டு முதல், 45 லட்சம் ரூபாய் வரை, ஆண்டு கல்விக் கட்டணம் செலுத்தி, மாணவர்கள் சட்டம் பயிலும் இந்தியாவில், கட்டண வீதங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசே சட்டக் கல்லூரிகளை அமைக்கப் போவதாகக் கூறுவது திசைதிருப்பும் வேலை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எது எப்படியோ, தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் மட்டும் உள்ள சட்டக் கல்லூரிகள், சட்டத்தில் ஆர்வமுள்ள மாணவர்கள் வசிக்கும், வேறு மாவட்டங்களுக்கும் பரவலாகும் பட்சத்தில், அதிகாரம் மிக்க சட்ட அறிவை அனைவரும் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us