சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சிக்கல் - அரசு கவனிக்குமா?
சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சிக்கல் - அரசு கவனிக்குமா?
UPDATED : ஆக 23, 2014 12:00 AM
ADDED : ஆக 23, 2014 12:13 PM
மதுரை: மதுரை சந்தைப்பேட்டையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு (மைனர் ஜெயில்), ஓராண்டாக நிதி வழங்கப்படாததால் கடன் வாங்கி சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படாததால், அவர்கள் விரக்தியில் உள்ளனர். குற்றங்களில் ஈடுபடும் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், இப்பள்ளியில் அடைக்கப்படுகின்றனர். தற்போது 35 சிறுவர்கள் உள்ளனர்.
பள்ளியை மதுரை பாலர் உதவிச்சங்கம் நிர்வகித்து வருகிறது. சமையலர், வார்டன்கள் தலா 2 பேர், ஒரு கண்காணிப்பாளர், ஒரு கிளார்க் பணிபுரிந்து வருகின்றனர். வேலை வாய்ப்பு மூலம் இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்ட இவர்களுக்கு, ஓராண்டாக சம்பளம் வழங்கப்படவில்லை. அதேபோல், சிறுவர்களுக்கு வேண்டிய உடை, உணவு உட்பட அடிப்படை வசதிகளுக்கும் அரசு தரப்பில் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் பள்ளி நிர்வாகத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், நிலைமையை சமாளிக்க மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் கடன் வாங்கி சமாளிக்க வேண்டிய நிலைக்கு நிர்வாகிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:ஓராண்டுக்கு முன் வரை ஊழியர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் தமிழக அரசு சம்பளம் வழங்கி வந்தது. பின், இந்திய குழந்தைகள் ஒருங்கிணைப்பு திட்டம் மூலம் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, நிதியில் 80 சதவீதம் மத்திய அரசும், 10 சதவீதம் மாநில அரசும், 10 சதவீதம் தொண்டு நிறுவனங்களும் வழங்கும்.
ஆனால், இதுகுறித்த தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்படாததால் நிதி ஒதுக்குவதில் தாமதம் என்கின்றனர். வற்புறுத்தி கேட்டால், அரசின் உத்தரவு நகல் கிடைக்கவில்லை என்கின்றனர். மேலும், நிதி நிலைமையை காரணம் காட்டி, "தற்போதுள்ள ஊழியர்களே போதும். யாராவது ஓய்வு பெற்றால் அவர்களுக்கு பின் யாரையும் புதிதாக நியமிக்கவேண்டாம்" என எங்களுக்கு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதே சூழ்நிலை நீடித்தால், சிறுவர்களை கண்காணிப்பதில் ஊழியர்கள் மெத்தனம் காட்டக்கூடும். நிர்வாக ரீதியாக சிக்கல் ஏற்படும். இதை உணர்ந்து, போதுமான நிதி மற்றும் நிலுவைத்தொகைகளை உடனே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
