அரசினர் மகளிர் மேனிலைப் பள்ளியில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாடு
அரசினர் மகளிர் மேனிலைப் பள்ளியில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாடு
UPDATED : ஆக 25, 2014 12:00 AM
ADDED : ஆக 25, 2014 12:30 PM
திருத்தணி: அரசினர் மகளிர் மேனிலைப் பள்ளியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டால், மாணவியர், வகுப்புகளை புறக்கணித்து, குடங்களில் தண்ணீர் பிடித்து செல்லும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது.
திருத்தணி ஆறுமுக சுவாமி கோவில் தெருவில், அரசினர் மகளிர் மேனிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 2,300க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். மாணவியரின் குடிநீர் வசதிக்காக, பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மற்றும் கிணற்றில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால், 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பள்ளி வளாகத்தில் குடிநீர் வசதி இல்லாததால், மாணவியர், தங்களது வீடுகளில் இருந்து கேன்கள் மூலம் குடிநீர் கொண்டு வருகின்றனர். ஆசிரியர்கள் ஓய்வு அறை மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில் குடிநீர் இல்லாததால், சில மாணவியர், வகுப்பு நேரத்தில், பள்ளி அருகே உள்ள தெருவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் இருந்து, குடங்களில் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். இதனால், மாணவியரின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, பள்ளியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என, மாணவியரின் பெற்றோர் எதிர்பார்கின்றனர்.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "குடிநீர் பற்றாக்குறை குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளோம். மேலும், பெற்றோர் - ஆசிரியர் கழகம் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். விரைவில் குடிநீர் பிரச்னை தீர்ந்துவிடும்" என்றார்.
