மாநில அளவிலான பையேத்தல் போட்டியில் திருப்பூரை சேர்ந்த அண்ணன், தங்கை வெற்றி
மாநில அளவிலான பையேத்தல் போட்டியில் திருப்பூரை சேர்ந்த அண்ணன், தங்கை வெற்றி
UPDATED : ஆக 25, 2014 12:00 AM
ADDED : ஆக 25, 2014 12:58 PM
திருப்பூர்: மாநில அளவிலான பையேத்தல் போட்டியில், திருப்பூரை சேர்ந்த அண்ணன், தங்கை வெற்றி பெற்று, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
பையேத்தல் போட்டி, மூன்று பிரிவுகளை உள்ளடக்கியது. முதலில், 1,500 மீ., தூரம் ஓட வேண்டும். பின், 200 மீ., தூரம் நீச்சலில் ஈடுபட்டு, மீண்டும் 1,500 மீ., தூரத்தை ஓடிச்சென்று, இலக்கை அடைய வேண்டும். முதல் மூன்று இடங்களை பிடிப்போர், அடுத்த போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.
திருப்பூர் சசூரி வித்யாபவன் பள்ளி பிளஸ் 1 மாணவன் கார்த்திகேயன்; இவரது தங்கை விகாஷ்னி, செயின்ட் தாமஸ் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறார். இவர்கள் இருவரும், கடந்த 9 மற்றும் 10ம் தேதிகளில், நாகப்பட்டினத்தில் நடந்த மாநில அளவிலான பையேத்தல் போட்டியில் பங்கேற்றனர்.
அதில், இருவரும் வெற்றிபெற்று, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, தேசிய பையேத்தல் போட்டியில் விளையாட உள்ளனர். இப்போட்டியில் விளையாட, முதன்முறையாக மாநில அளவில் தேர்வாகி இருப்பது இவர்கள் இருவரே. தேசிய அளவிலான போட்டியில் கடலில் நீந்த வேண்டும்.
இதுகுறித்து இருவரும் கூறுகையில், "தமிழ்நாடு மாடர்ன் பெண்டாத்தலான் அசோசேசியன் மூலம், பையேத்தல் போட்டி நடத்தப்படுகிறது. மாநில அளவிலான போட்டியில் மூன்றாமிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் 25, 26 மற்றும் 27ல், மாமல்லபுரத்தில் நடைபெறும் தேசிய போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்" என்றனர்.
