படிக்கும் மாணவர்களுக்கு போதிய இடவசதி இல்லாத வால்பாறை நுாலகம்
படிக்கும் மாணவர்களுக்கு போதிய இடவசதி இல்லாத வால்பாறை நுாலகம்
UPDATED : ஆக 25, 2014 12:00 AM
ADDED : ஆக 25, 2014 01:56 PM
வால்பாறை: வால்பாறை நுாலகத்தில், போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு போதிய இடவசதி இல்லாததால், அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
வால்பாறை தாலுகாவில், நகரில் இரண்டாம் நிலை நுாலகமும், காடம்பாறையில் மூன்றாம் நிலை நுாலகமும், அட்டகட்டி, சோலையார் நகர் ஆகிய பகுதிகளில் ஊர்ப்புற நுாலகமும் செயல்படுகின்றன. வால்பாறை நகரின் மத்தியில், இரண்டாம் நிலை நுாலகம் அமைந்துள்ளது. கடந்த 1955ம் ஆண்டு சிறிய அளவில் கட்டப்பட்ட இந்த நுாலகம், தற்போது விரிவுபடுத்தப்பட்டு, கம்பீரமாக காட்சியளிக்கிறது.
நுாலகத்திற்கு நாள்தோறும் 300க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து செல்கின்றனர். இந்த நுாலகத்தில் தற்போது 47 ஆயிரத்து 300 புத்தகங்கள் உள்ளன. 27 புரவலர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்நுாலகத்தை பள்ளி மற்றும் கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள், மற்றும் வாசகர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
நுாலகத்தின் கீழ் தளத்தில் வாசகர்கள் படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், மேல்தளத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., டி.என்.பி.எஸ்.சி., போன்ற போட்டித்தேர்வுகளுக்காக படிக்க போதிய வசதி இல்லாத நிலையில், நுாலகத்திற்கு வரும் மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இதுகுறித்து வாசகர்கள் கூறியதாவது: வால்பாறை நுாலகத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் வாசகர்கள் படிக்க தேவையான புத்தகங்கள் உள்ளன. ஆனால், போட்டித் தேர்வுகளுக்காக படிக்கும் மாணவர்களுக்கு தனி அறை இல்லை. இதனால், உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.மேலும், வாசகர்களின் நலன் கருதி முடீஸ், சின்கோனா, ரொட்டிக்கடை, கருமலை ஆகிய பகுதிகளில் பகுதி நேர நுாலகம் துவங்க வேண்டும். நுாலகத்தின் முன்புறம் வாசகர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும். ஆபத்தான நிலையில் உள்ள மரத்தையும் வெட்ட வேண்டும் என்றனர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
மாவட்ட நுாலக அலுவலர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, "எஸ்டேட் பகுதிகளில் பகுதி நேர நுாலகம் அமைப்பது குறித்து, நேரில் ஆய்வு செய்த பின் முடிவு செய்யப்படும். போட்டித்தேர்வுக்காக படிக்கும் மாணவர்களின் நலன் கருதி, விரைவில் மேல்தளத்தில் தனி அறை அமைக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
