சரியான உடற்பயிற்சி, மனப்பயிற்சி வெற்றிக்கு வித்திடும்: விளையாட்டு வீரர்களுக்கு அறிவுரை
சரியான உடற்பயிற்சி, மனப்பயிற்சி வெற்றிக்கு வித்திடும்: விளையாட்டு வீரர்களுக்கு அறிவுரை
UPDATED : ஆக 26, 2014 12:00 AM
ADDED : ஆக 26, 2014 12:13 PM
சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சி, மனப்பயிற்சி வெற்றிக்கு வித்திடும், என, விளையாட்டு வீரர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கோவையின் பல்வேறு இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக, நீண்டதுார ஓட்டப் போட்டியும் நடத்தப்பட்டது. வரும் 5ம் தேதியும், மினி மாரத்தான் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்கும் வீரர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை குறித்து, சிங்காநல்லுார் ஆர்த்தோ ஒன் எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மைய, விளையாட்டு காயங்களுக்கான சிறப்பு மருத்துவர் ஷியாம் சுந்தர் கூறியதாவது: தடகளத்தில் முக்கியமான ஒன்று, தொலைதுார ஓட்டம். இதில், வீரர்கள் தங்கள் உடல் மற்றும் மன உறுதியை சீர்படுத்தவில்லை என்றால், வெற்றி என்பது எட்டாக்கனியாகி விடும்.
மற்ற போட்டிகளை விட, இதில் பயிற்சி என்பது மிக முக்கியம். ஓடும்போது, உடல் சோர்வு மட்டுமல்லாது, மனச் சோர்வும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை எப்படி கையாள்வது என்ற கேள்வி, விளையாட்டு வீரர்களின் மனதில் எழும். தொலைதுாரம் ஓடும்போது, உடலில் உள்ள வெப்பத்தை கட்டுப்படுத்த, வியர்வையின் மூலம் நீரை வெளியேற்றுகிறோம். ஆனால், வெப்பம் மிகுந்த இடத்தில் ஓடும்போது அதிக நீர் செலவாகிறது.
இதனால், உடலில் நீர் வறட்சி ஏற்படுகிறது. இதில், முதலில் பாதிக்கப்படுவது நம் தசைதான். இதன் பின் மூளை. இதை கையாள மிக முக்கியமான ஆலோசனை, குறிப்பிட்ட இடைவெளியில் சரியான அளவுகளில் நீராகாரத்தை உட்கொள்ள வேண்டும்.
இதையே, வீரர்கள் இரண்டு விதமாக கையாள்வதுண்டு. சிலர், போட்டியின் முன்பே அதிகளவில் நீர் உட்கொண்டு ஓடுவதுண்டு. சிலர் போட்டியின் இடையே சிறிது, சிறிதாக அருந்துவதுண்டு. இது, அவரவரின் பயிற்சிக்கேற்ப மாறுபடும். இதை விட முக்கியமான ஒன்று. போட்டிக்கு பல நாட்களுக்கு முன்பிருந்தே சரியான பயிற்சி மேற்கொண்டால், உடல் நிலையை வெவ்வேறு மாற்றங்களுக்கு தக்கவாறு சீர்செய்ய இயலும்.
பெரும்பாலும், வீரர்களுக்கு உடல் சோர்வை விட, மனச்சோர்வே தோல்விக்கான முக்கிய காரணமாகிறது. எனவே, மனதை ஒருநிலைப்படுத்த தியானப் பயிற்சி பெரிதும் உதவும். சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சி, மனப்பயிற்சி வெற்றிக்கு வித்திடும். இவ்வாறு, ஷியாம் சுந்தர் கூறினார்.
