அறிவியல் புத்தாக்க கண்காட்சியில் மீனவ பகுதி மாணவிக்கு விருது
அறிவியல் புத்தாக்க கண்காட்சியில் மீனவ பகுதி மாணவிக்கு விருது
UPDATED : ஆக 26, 2014 12:00 AM
ADDED : ஆக 26, 2014 12:47 PM
பொன்னேரி: அறிவியல் புத்தாக்க கண்காட்சியில், மின் தேவை அற்ற, அலைபேசி மின்னேற்றியான, மொபைல்போன் சார்ஜரை உருவாக்கிய, மீனவ பகுதி மாணவிக்கு விருது கிடைத்தது.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் சார்பில், புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகளுக்கான அறிவியல் கண்காட்சி, சென்னை, ஆவடியில் நடந்தது.
சிறந்த படைப்பு: மாவட்ட அளவில் நடைபெற்ற மேற்கண்ட விருதிற்கான போட்டியில், 210 மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்ட கல்வி அலுவலர் நேரு, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், பாலசுப்ரமணியன், கற்பகம், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் ஆகியோர் நடுவர்களாக இருந்து, சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்தனர்.
இதில், பழவேற்காடு, ஜமீலாபாத் மீனவப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த, 7ம் வகுப்பு மாணவி ஐனூன் ஜாரியா பங்கேற்றார். அவர், அலைபேசிக்கு, மின்சாரம் இன்றி மின்னேற்றும் சாதனத்தை உருவாக்கி, கண்காட்சியில் வைத்து, அதற்கான செயல் விளக்கத்தை அளித்தார்.
இதற்கு, கைசுழற்சி கைபேசி மின்னாக்கி என, பெயரிடப்பட்டிருந்தது. பார்வையாளர்களை கவர்ந்த ஐனூன் ஜாரியாவின் உருவாக்கத்திற்கு, மாவட்ட அளவில் முதலிடத்திற்கான விருது கிடைத்தது. விருதுபெற்ற இவர், செப்., 6ம்தேதி, திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான விருதுகளுக்கான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
பாராட்டு: விருதுபெற்ற ஐனூன் ஜாரியாவை, பள்ளியின் அறிவியல் மற்றும் வழிகாட்டி ஆசிரியர் தாளமுத்து நடராஜன், தலைமை ஆசிரியை பிரேமலதா உள்ளிட்டோர் பாராட்டினர். இரண்டாம் பரிசு, கே.கே.நகர், நடுநிலைப் பள்ளி மாணவர், தணிகைமுருகன், மூன்றாம் பரிசு, திருவள்ளூர் லட்சுமிபுரம் நகராட்சி பள்ளி மாணவி, சந்தியா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
