நடுநிலைப்பள்ளி அருகே குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்
நடுநிலைப்பள்ளி அருகே குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்
UPDATED : ஆக 27, 2014 12:00 AM
ADDED : ஆக 27, 2014 12:21 PM
வாலாஜாபாத்: சிங்காடிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே, கழிவுநீர், குளம் போல் தேங்கி நிற்பதனால், சுகாதார சீர்கேடும், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
காஞ்சிபுரத்தில் இருந்து ஏனாத்துார் வழியாக, தென்னேரி செல்லும் சாலையில், சிங்காடிவாக்கம் கிராமம் உள்ளது. இக்கிராம மையத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகே, மழைநீர் சேகரிப்பு குளம் உள்ளது. இக்குளத்தின் அருகே, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலக்கிறது. இதனால், இந்த மழைநீர் குளம், கழிவுநீர் குளமாக காட்சி அளிக்கிறது.
இதில், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆகி, நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே, குளத்தில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
