காம்ராஜ் பல்கலையில் ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய ஆய்வகங்கள்
காம்ராஜ் பல்கலையில் ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய ஆய்வகங்கள்
UPDATED : ஆக 30, 2014 12:00 AM
ADDED : ஆக 30, 2014 11:18 AM
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி இயக்ககத்தில், ரூ.8 லட்சம் மதிப்பிலான 3 அறிவியல் ஆய்வகங்கள் செப்., முதல் யல்பாட்டிற்கு வருகின்றன.
இப்பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககம் சார்பில், தமிழகத்தில் 104, பிற மாநிலங்களில் 140, வெளி நாடுகளில் 11 என, மொத்தம் 266 கல்வி மையங்கள் (ஸ்டடி சென்டர்) செயல்பட்டு வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட பட்டம், பட்டயம் மற்றும் முதுகலை படிப்புகளில், 1.24 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
இதில், அறிவியல் பட்டப் பிரிவுகளுக்கு செய்முறை தேர்வுக்கான சொந்த ஆய்வகங்கள் வசதி பல்கலையில் இல்லாமல், வெளியே உள்ள கல்லூரி மற்றும் இன்ஸ்டிடியூட்ஸ் ஆய்வகங்களை மாணவர்கள் பயன்படுத்தினர். துணைவேந்தர் கல்யாணி உத்தரவை தொடர்ந்து, உயிரி அறிவியல் (தாவரவியல், விலங்கியல், மைக்ரோ பயாலஜி), வேதியியல், இயற்பியல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அன் கம்யூனிகேஷன் ஆய்வகங்கள் கட்ட ரூ.8 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் தற்போது முடிவுற்றுள்ளன.
அனைத்தும் கணினி மயம்:
துணைவேந்தர் கல்யாணி கூறியதாவது:
பல்கலையில் ஆராய்ச்சிகளுக்கும், தொலைநிலைக் கல்வி மேம்பாட்டிற்கும் அதிக முக்கியத்துவம் தரப்படுகின்றது. நீண்ட நாள் கோரிக்கையான தொலைநிலை கல்வி அறிவியல் பிரிவு மாணவர்களுக்காக, 3 ஆய்வகங்கள் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இவை செப்., முதல் வாரத்தில் செயல்பாட்டிற்கு வரும். இதுதவிர, இப்பல்கலை தொலைநிலை கல்வி முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக வெளிநாடு மற்றும் வெளி மாநில மாணவர்களுக்கு ’இ-பாடத்திட்டம்’ (இ- கன்டன்ட்) வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் விபரங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன.அவர்களுக்கு தனித்தனியே பதிவெண் வழங்கி, ’லாக்இன்’ மற்றும் ’பாஸ்வோர்டு’ ஒதுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் ஆன்லைனிலேயே பல்கலையில் உள்ள துறைகளை தொடர்பு கொண்டு, ஆசிரியர்களிடம் மாணவர்கள் சந்தேகம் கேட்பது, நிர்வாக ரீதியான சந்தேகங்கள், கட்டணம் மற்றும் தேர்வு விவரங்கள், அறிவிப்புகள், சுற்றறிக்கைகள் உட்பட பல்வேறு தகவல் பரிமாற்றங்கள் மேற்கொள்ளலாம், என்றார்.
