அழகப்பா பல்கலை துணைப் பதிவாளர் பிச்சையப்பன் நியமனம் ரத்து
அழகப்பா பல்கலை துணைப் பதிவாளர் பிச்சையப்பன் நியமனம் ரத்து
UPDATED : செப் 02, 2014 12:00 AM
ADDED : செப் 02, 2014 12:07 PM
மதுரை: காரைக்குடி அழகப்பா பல்கலை துணைப் பதிவாளர் பிச்சையப்பன் நியமனத்தை ரத்து செய்து, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
காரைக்குடி அழகப்பா பல்கலை உதவிப் பதிவாளர் ராமமூர்த்தி தாக்கல் செய்த மனு: பல்கலையில் துணைப் பதிவாளர் பதவிக்கு நேர்காணல் நடந்தது. நான், மற்றொரு உதவிப் பதிவாளர் பிச்சையப்பன் உட்பட 12 பேர் அழைக்கப்பட்டோம். ஒருவர் வரவில்லை. நேர்காணலில் பிச்சையப்பன் 186 மதிப்பெண் பெற்றதாகக்கூறி, அவரை துணைப் பதிவாளராக தேர்வு செய்தனர்.
விதிகளின்படி தகுதி, பணிமூப்பு அடிப்படையில் துணைப் பதிவாளர் நியமனம் மேற்கொள்ள வேண்டும். நியமனத்தில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. நேர்காணல் அடிப்படையில் மட்டும் நியமனம் நடந்துள்ளது. பிச்சையப்பன் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டார். நீதிபதி எஸ்.நாகமுத்து முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜரானார்.
நீதிபதி: துணைப் பதிவாளர் நியமனம் நேர்காணல் அடிப்படையில் நடந்துள்ளது. கல்வித் தகுதி, பணிமூப்பை கருத்தில் கொள்ளவில்லை. நியமனத்தில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. விதிகளை பின்பற்றவில்லை. பிச்சையப்பன் நியமனம் ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் முறைப்படி, துணைப் பதிவாளர் நியமனத்தை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
