தன்னம்பிக்கை சின்னமாய் திகழும் அவினாசி மாற்றுத் திறனாளி
தன்னம்பிக்கை சின்னமாய் திகழும் அவினாசி மாற்றுத் திறனாளி
UPDATED : செப் 02, 2014 12:00 AM
ADDED : செப் 02, 2014 12:46 PM
விளையாட்டில் மட்டுமல்ல... அனைத்து துறைகளிலும் தங்களால் சாதிக்க முடியும் என்று, தன்னம்பிக்கை உதிர்க்கிறார்... அவினாசியை சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவர்.
சோர்ந்து போகும் மனிதர்களுக்கு, தன்னம்பிக்கை எனும் பாதையை காட்டி வரும், பெரும்பாலான மனிதர்களில், மாற்றுத்திறனாளிகள் முக்கியமாக உள்ளனர். அவர்களின் தன்னம்பிக்கைதான், நமக்குள்ளும் உற்சாக ஊற்று உருவெடுக்க வைக்கிறது. இதுபோன்ற காட்சியை, சமீபத்தில் கோவையில் பார்க்க முடிந்தது. கோவை செஸ் மேட்ஸ் சார்பில், தேசிய அளவிலான செஸ் போட்டி, கணபதியில் நடத்தப்பட்டது.
இதில், குஜராத், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.இதில், சிறப்பம்சமாக, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சிலரும் பங்கேற்று, தங்களால் முடியும் என்று வியக்க வைத்தனர். சதுரங்க கட்டத்தில் இருக்கும் காய்களை நகர்த்தியவுடன், இவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சதுரங்கக் கட்டத்திலும் நகர்த்தி, தங்களுக்கான நம்பிக்கை ஏற்படுத்தினர். இதில், அவினாசியை சேர்ந்த ஜெயபிரகாசும் ஒருவர்.
அவர் கூறியதாவது: பார்வை குறைபாடால் பாதிக்கப்பட்ட நான், ஆரம்பத்தில் இருந்தே சோர்ந்து போகவில்லை. என் பெற்றோர் எனக்களித்த ஊக்கம், என்னை செஸ் போட்டியில் பங்கேற்க வைத்தது. விடாமல் பயிற்சி செய்து, பல்வேறு அளவிலான போட்டிகளில் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தி வருகிறேன். ஒன்றும் முடியாது என்று ஒதுங்கியிருப்பதை விட, விளையாட்டில் ஈடுபட்டு தோற்பது எவ்வளவோ மேல் என்று கருத்தை உள்வாங்கிக் கொண்டு வெற்றி பெற்று வருகிறேன்.
தோற்கும் போட்டிகளில், பாடம் கற்றுக் கொண்டு, மீண்டும், மீண்டும் முயற்சித்து வருகிறேன். இதுபோன்ற தேசியப் போட்டிகளில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதற்காக தொடர் பயிற்சி எடுத்து வருகிறேன். இவ்வாறு ஜெயபிரகாஷ் கூறினார்.
