பல்வேறு சேவைகளில் ஈடுபட பல்கலை என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
பல்வேறு சேவைகளில் ஈடுபட பல்கலை என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
UPDATED : செப் 03, 2014 12:00 AM
ADDED : செப் 03, 2014 12:25 PM
மதுரை: பல்கலைகளில் நாட்டு நலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.) சார்பில் சேவை பணியில் ஈடுபடுவதுடன், ரத்ததானம் மற்றும் மரங்கள் நட்டு பராமரிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும், என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் பல்கலை என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம், இத்துறை மாநில கமிட்டி சார்பில் நடந்தது. சென்னை பல்கலை துணைவேந்தர் தாண்டவன், மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கல்யாணி மற்றும் அனைத்து பல்கலை என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற காமராஜ் பல்கலை ஒருங்கிணைப்பாளர் நல்லகாமன் கூறியதாவது: கிராமங்களை தத்தெடுத்து, அங்கு சுத்தப்படுத்தும் பணிகள், மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு நாடகங்கள் நடத்துவது மற்றும் மக்கள் சேவை பணிகளை என்.எஸ்.எஸ்., அமைப்புகள் நடத்தி வருகின்றன.
சென்னையில் நடந்த கூட்டத்தில், இந்தாண்டு முதல் ரத்ததானம், மரங்கள் நட்டு பராமரித்தல், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், என மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சுந்தரராஜன் வலியுறுத்தினார். மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்டு 64 கல்லூரிகளிலும், இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டது.
இருப்பினும், கடந்தாண்டே ரத்த தானம் முகாம்கள் மூலம் 2464 யூனிட் ரத்தம் பல்கலையால் சேகரிக்கப்பட்டது. இந்தாண்டு மெகா ரத்த தானம் முகாம் நடத்தி, 5 ஆயிரம் யூனிட் சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் மரக்கன்றுகள் நடவும், மதுவுக்கு அடிமையானவர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலங்கள் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன, என்றார்.
