தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிக்கல்வித் துறையில் 14,700 புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதில் உச்சகட்ட குழப்பம்

பள்ளிக்கல்வித் துறையில் 14,700 புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதில் உச்சகட்ட குழப்பம்

பள்ளிக்கல்வித் துறையில் 14,700 புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதில் உச்சகட்ட குழப்பம்


UPDATED : செப் 04, 2014 12:00 AM

ADDED : செப் 04, 2014 11:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2014 12:00 AM ADDED : செப் 04, 2014 11:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பணி நியமன உத்தரவு பெற்று, பணியில் சேராதவர்களும், பணி நியமன உத்தரவை பெறாமல் உள்ளவர்களும், தேர்வு ரத்தாகிவிடுமோ என, அச்சம் அடைந்துள்ளனர்.

இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) முறையை கொண்டு வந்ததில் இருந்து, தமிழகத்தில், தொடர் குளறுபடி நடந்து வருகிறது.

காரணம் என்ன?

கடந்த 2012, அக்., 5ம் தேதி, ஆசிரியர் நியமனம் தொடர்பாக, முதல் அரசாணை வெளியானது. அதில், வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, டி.இ.டி., தேர்வில், 150க்கு பெறும் மதிப்பெண், 60க்கும், பிளஸ் 2, ஆசிரியர் கல்வி பட்டய படிப்பு, பட்டப் படிப்பு, பி.எட்., போன்ற படிப்புகளில் தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 40 மதிப்பெண் என 100 மதிப்பெண் கணக்கிட்டு, அதன் அடிப்படையில், தகுதியான ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது.

இந்த முறையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்வர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த அரசாணை, அறிவியல் பூர்வமானது அல்ல; எனவே, யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல், புதிய அரசாணையை வெளியிட வேண்டும் என அந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், தமிழக அரசுக்கு, புதிய கணக்கிடும் முறை ஒன்றையும், உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையை ஏற்று, தேர்வர் பெறும் ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும், சதவீத அடிப்படையில் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் தேர்வு செய்யும் புதிய முறையை, கடந்த மே 30ம் தேதி, புதிய அரசாணையாக கல்வித்துறை வெளியிட்டது.

இதற்கிடையே, டி.இ.டி., அல்லாத பிற கல்வி தகுதிகளுக்கு வழங்கப்படும் 40 மதிப்பெண்ணுக்கான வெயிட்டேஜ் முறையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

தடை

இந்நிலையில், ஆக., 10ம் தேதி, ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை டி.ஆர்.பி., வெளியிட்டது. இதை தொடர்ந்து கடந்த ஆக., 30ம் தேதி முதல், பணி நியமனம் நடந்து வருகிறது. நேற்றுடன் ஐந்து நாள் நடந்த கலந்தாய்வில், 5000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, பணிநியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. நேற்று, மாவட்டத்திற்குள் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடந்து கொண்டிருந்த நிலையில், பிற்பகல் 2:00 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால உத்தரவு குறித்த தகவல் கல்வித்துறைக்கு கிடைத்தது.

புதிய ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தலாம்; ஆனால் அவர்கள் பணியில் சேர கல்வித்துறை அனுமதிக்கக் கூடாது என, மதுரை கிளை இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. இதனால், அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்த கல்வித்துறை அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து உயர் அதிகாரிகளிடம் விளக்கினர். தேர்வுபெற்ற 14,700 பேரில், பணி நியமன உத்தரவு பெற்று, பணியில் சேராதவர்களும், பணி நியமன உத்தரவு பெற காத்திருப்பவர்களும், தேர்வு ரத்தாகிவிடுமோ என அச்சம் அடைந்துள்ளனர்.

பணியில் சேர உடனடி தடை

கல்வித்துறை வட்டாரம் கூறியதாவது: தற்போதைய நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதுவும் கூற முடியாது. நீதிமன்றத்தின் உத்தரவு விவரம் கிடைத்ததும், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அடுத்த முடிவு எடுக்கப்படும். பணி நியமன கலந்தாய்வுக்கு, நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. எனவே, ஏற்கனவே அறிவித்தபடி, பணி நியமன கலந்தாய்வு தொடர்ந்து நடக்கும். ஆனால் உத்தரவு பெற்ற ஆசிரியர்கள், பணியில் சேர அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

முதல் கோணல் முற்றும் கோணலானது

ஆய்வுக் கூட்டம் நடத்துவதில், கல்வித்துறையை மிஞ்ச வேறு ஒரு துறையும் கிடையாது. அந்தளவிற்கு மாதத்திற்கு 20 கூட்டங்களை நடத்துவர். ஆனால், எந்த ஒரு பொருள் குறித்தும் விளக்கமாக, ஆழமாக விவாதித்து, யாரும் ஆட்சேபனை எழுப்பாத வகையில், முடிவை எடுக்க மாட்டர்.

ஏனோ, தானோ என முடிவை எடுப்பதும், பின், அதற்கு எதிர்ப்பு வந்ததும் மாற்றுவதும்தான், கல்வித்துறையின் வாடிக்கையாக உள்ளது. ஆசிரியர் நியமனத்திற்கான வழிமுறையை உருவாக்க, அமைச்சர் (அப்போது சிவபதி) தலைமையில் உயர்மட்டக்குழு உருவாக்கப்பட்டது. இக்குழு அமைப்பதற்கான அரசாணை 2012, செப்., 14ல் வெளியானது.

செப்., 14, 24 ஆகிய இரு நாட்கள் கூடி, ஆலோசனை செய்து, அக்., 5ம் தேதி வெயிட்டேஜ் மதிப்பெண்ணுடன் கூடிய அரசாணையை வெளியிட்டு விட்டனர். இந்த அரசாணையை, சென்னை உயர்நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்தான் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின், கடந்த மே 30ம் தேதி, புதிய அரசாணையை வெளியிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us